Kanchipuram New Bus Stand lastest News: காஞ்சிபுரம் பல நூற்றாண்டுகள் பழமையான நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் பட்டு நகரமாகவும், கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது. இது தவிர காஞ்சிபுரம் மாவட்டம் தொழில் வளர்ச்சிக்கும், தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய பங்களித்து வருகிறது.‌ இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் காஞ்சிபுரத்திற்கு அடிப்படை வசதிகள் என்பது, கேள்விக்குறியாக இருந்து வருகிறது.‌ 


காஞ்சிபுரம் பேருந்து நிலையம் - Kanchipuram Bus Stand 


காஞ்சிபுரம் மாநகர் பகுதியில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தில், நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.


காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, கல்பாக்கம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், பெங்களூர், வந்தவாசி, பாண்டிச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் ,திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் - Kanchipuram New Bus Stand 


காஞ்சிபுரத்தில் உள்ள பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதுள்ள மக்கள் தொகை வாகன வசதிக்கு அவை பொறுத்தமாக இருந்தது. மக்கள் தொகை அதிகமான நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வருகிறது.


இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது. காஞ்சிபுரத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதியாக 38 கோடி ரூபாய் ஒதுக்கியது. இருப்பினும் இன்னும் புதிய பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்வதில் இழுப்பறி இருந்து வந்தது. 


காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 28 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை இருந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்றொரு இடம் தேர்வு செய்தது அதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. 


புதிய பேருந்து நிலையம் எங்கு அமைகிறது ? Kanchipuram New Bus Stand Proposed Location 


காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே காஞ்சிபுரம் நகருக்கு செல்லும் வழியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. சுமார் 19 ஏக்கர் பரப்பளவு பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அமைப்பதற்கு 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மண் பரிசோதனை நிறைவு - Kanchipuram New Bus Stand Update 


சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். தற்போது அந்த இடம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அமையும் இடத்தை பாதுகாக்க வேலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. மண் பரிசோதனை நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் குறித்து தனியார் நிறுவனத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு விரைவில் டெண்டர் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.