காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு இரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு சென்றபோது பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் வீட்டுப்பாடம் எழுதிய சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான அரசு மருத்துவமனையாக இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நுழைவு சீட்டு வழங்கும் மையத்தினையும், பின்பு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பொது பிரிவு மையம் விபத்து பிரிவு, அவசரகால சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மையத்தையும், டயாலிஸிஸ் மையத்தையும், கண் சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
குறைகளை கேட்டு அறிந்த ஆட்சியர்
இரவு நேரத்தில் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், நோயாளி அருகில் மருத்துவர்கள் உள்ளாரா, மருத்துவர் பற்றாக்குறை இல்லாமல் நோயால் சிகிச்சை பார்க்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரத்த சேமிப்பு வங்கியும், நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு, மருந்து கையிருப்பை கேட்டறிந்தார்.
உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்
மேலும் மருத்துவமனையை சுற்றி பார்த்து சுகாதாரமாக வைக்கவும், பொதுப்பணி துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு குறித்தும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நோயாளியுடன் வருகை தந்திருக்கும் பொது மக்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா ? என ஆய்வு செய்த ஆட்சியர ஓய்வறையில் தங்காமல் சாலை ஓரமாகவே படுத்து உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்களை அறிவுரை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள ஓய்வறையில் தங்குமாறு அறிவுரை வழங்கினார்.
சிறுமியின் நெகிழ்ச்சி செயல்
இப்படி இரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொணடிருந்தபோது, சிறுமி ஒருவர், பேட்டரி லைட் வெளிச்சத்தின் உதவியுடன் படித்துக் கொண்டிருந்த வீடியோ தற்பொழுது வெளியாகி நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அந்த மாணவி பேட்டரி லைட் வெளிச்சத்துடன், பள்ளிக்கூடத்தின் வீட்டுப்பாடம் செய்துள்ளார். தற்பொழுது சிறுமி குறித்து விசாரித்த பொழுது, அச்சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் வெளியில் அதுவும் இரவில் அவருக்காக காத்திருந்த பொழுது, தனது பள்ளி பணியை தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தாய் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாலும் தன்னுடைய பள்ளி படிப்பில் கவனமாக இருந்து, மருத்துவமனை, இரவு என்றும் கூட பாராமல் பேட்டரி லைட்டை கொண்டு வீட்டுப்பாடம் செய்த மாணவியின் செயல் அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கூடவே படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே அந்த சிறுமி இப்படி மருத்துவமனையிலும் தன்னுடைய வீட்டுப்பாடத்தை செய்துள்ளார்.