காஞ்சிபுரம் மாநகராட்சி ( kanchipuram corporation )மேயராக செயல்பட்டு வரும் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லை என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யுமாறும் மாமன்ற உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து புகார் செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 



காஞ்சிபுரம் மாநகராட்சி -  மகாலட்சுமி யுவராஜ்



காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த எம்.மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டாவர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் திமுக உட்பட அனைத்துக்கட்சியையும் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பது.


 


 


பிரச்சினைகளை சரி செய்ய முடியவில்லை



மேயரின் கணவர் ஆர்.யுவராஜ் எங்கள் வார்டு பகுதிகளில் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பணம் பெறுவதாக பொதுமக்கள் எங்களிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மேயரிடம் தெரிவித்தபோது அவரது கணவரை கண்டிக்காமல் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். இதிலிருந்து அவர் மேயரின் ஆதரவுடன் தான் செயல்படுகிறார் எனவும் தெரிய வருகிறது. எங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி குறைகளை சரி செய்ய முற்படும் போது அதிகாரிகளிடம் அக்குறைகளை சரி செய்ய வேண்டாம் என்றும் கூறி விடுகிறார்.


 




 


 


இதனால் எங்கள் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகள், குடிநீர் பிரச்சினைகள் உட்பட எந்தப் பிரச்சினையையும் சரி செய்ய முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் எங்கள் பகுதி மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்பட்டு விடும்.மேயராக தொடர்ந்து செயல்பட்டால் எங்கள் பகுதி மக்களின் பிரச்சினைகளை சரி செய்யவே முடியாமல் போய் விடும்.எனவே மேயரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். அவர் பெரும்பான்மையை நிருபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்டஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


 



 மாநகராட்சியில் அவ்வப்பொழுது சலசலப்பு


 



முதலில் மகாலட்சுமி யுவராஜுக்கு  திமுக சார்பில் மேயர் சீட் கொடுக்கப்பட்டது,  ஆனால் அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த மற்றொரு நபர் போட்டு விட்டார். அவருக்கு சுயாட்சிகள்,  பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆதரவளித்தனர். இதனால் முதலில்  பெரும்பான்மையை நிரூபிக்கவே, மாநகராட்சி பிரச்சனை ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவை பெற்று காஞ்சிபுரத்தின் முதல்  மேயராக பதவி  ஏற்றார்.





புதிய மேயராக பதவி ஏற்றதிலிருந்து,  மகாலட்சுமி யுவராஜுக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தற்பொழுது காஞ்சிபுரத்தின் துணை மேயராக உள்ளார். துணை மேயர் தரப்புக்கும் மற்றும் மேயர் தரப்பிற்கு மேல் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.  அதே போன்று மாநகராட்சி கூட்டங்களின்போது, பலமுறை சலசலப்பு போராட்டங்களும் நடைபெற்ற வருகிறது. இந்தநிலையில் கவுன்சிலர்களின் இந்த  முடிவு  காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.