காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் அடுத்த சில தினங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார்.'
தொடர்ந்த எதிர்ப்பு
காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அன்றைய தினம் 51 கவுன்சிலர்களும் கலந்து கொள்ளாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திமுகவின் தற்போதைய மேயர் மகாலட்சுமி யுவராஜ் பதவி தப்பியது. அந்தக் கூட்டத்தில் மேயர் தரப்பு ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததன் பின்னணியில், திமுக தலைமை இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
கடைசியாக நடந்த கூட்டம்
தற்பொழுது மேயர் நம்பிக்கையில்லா தீர்மானம் பிரச்சனை ஓய்ந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் மாநகராட்சி கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக 2023 டிசம்பர் மாதம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற பொழுதுதான், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன. அந்தக் கூட்டத்தின் பொழுதும் சலசலப்புகள் எழுந்தன. திமுக சார்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். மேயர் தரப்புக்கு ஆதரவாக 13 கவுன்சிலர்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தின் பொழுது, அதிமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உதவியுடன் அந்த கூட்டத்தை மேயர் மகாலட்சுமி நடத்தி முடித்திருந்தார்.
மேயருக்கு காத்திருக்கும் சவால்
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அவசரக் கூட்டம் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் இரண்டு முறை அனைத்து தீர்மானமும் ரத்து செய்யப்பட்டு கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் மாநகராட்சியின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த சில நாட்களில் கூட்டத்தை நடத்தி 100க்கும் மேற்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் மாநகராட்சி மேயருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் மாநகராட்சி கூட்டத்தை எந்தவித பிரச்சனை இன்றியும், போதிய கவுன்சிலர்களுடன் நடத்த வேண்டிய சவால் மேயர் மகாலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. மேயருக்கு எதிராக இருக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தன்று வெளிநடப்பு செய்தால் அல்லது கலந்து கொள்ளாமல் இருந்தால் மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். அதாவது 17 கவுன்சிலர்களின் ஆதரவு மேயருக்கு தற்பொழுது தேவைப்படுகிறது.
திரை மறைவில் பேச்சுவார்த்தை
மேயர் தரப்பில் தற்பொழுது 13 ஆதரவு கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே ஒரு சில அதிமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவை பெற மேயர் தரப்பு முயற்சி செய்து வருகிறது . கூட்டம் பிடித்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, ஆதரவை உறுதி செய்ய திரை மறைவில் பேரம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மூன்று கூட்டங்கள் போதிய கவுன்சிலர் இல்லாமல் , தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் போனால் மேயர் பதவிக்கு பிரச்சினை ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.