காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயர், மூன்று மண்டல குழு தலைவர்கள், 20 திமுக கவுன்சிலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள்  உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி



காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை கொண்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த, மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வப்பொழுது ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர் செயல்பாட்டிற்கு எதிராக போர் கொடி தூக்குவது அதேபோன்று எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்பது தொடர்கதை ஆகியுள்ளது.

 

21 தீர்மானங்கள் ரத்து 


 

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் முருகன் நியமிக்கப்பட்டார். செந்தில் முருகன் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என எதிர்கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று திமுக கவுன்சிலர்களையும் அவர் மதிப்பதில்லை என இன்று நடந்த மாதாந்திர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், இன்று நிறைவேற்றப்பட இருந்த 21 தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்யப்படுவதாக மேயர் மகாலட்சுமி அறிவித்து கூட்டத்தை பாதியிலேயே முடித்தார்.



பாதாள சாக்கடை திட்டம்


கூட்டம் முடிந்த பிறகும் திமுக கவுன்சிலர்கள் வெளியேறாமல் இருக்கையில் அமர்ந்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், வார்டுகளுக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இது போன்று வீடு கட்ட அனுமதி தருதல் , புதிய வீட்டுமனைகள் உருவாக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மட்டும் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நேற்று புதிதாக 250 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம், அவசர அவசரமாக நேற்று பூமி பூஜை செய்யப்பட்டதாகவும், இவற்றுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித தகவலும் தரப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணை மேயர் குமரகுருநாதன்


இந்தப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மூன்று மண்டல தலைவர்களும் அவர்களுடன் 20 திமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக அதிமுக , பாமக மற்றும் பாஜகவை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டுள்ளனர் . இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி பரபரப்புடன் காணப்படுகிறது.




 தொடரும் பிரச்சினைக்கு காரணம் என்ன ?


கடந்த சில மாதங்களாகவே,  மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து கவுன்சிலர்கள் மெய்யருக்கு எதிராக  குரல் கொடுத்து வருவதால், சில மாதங்களுக்கு முன்பு கூட  கவுன்சிலர்கள் மற்றும்  மேயர் ஆதரவாளர்களுக்கு இடையே  சமாதானம் ஏற்படுத்த அதிகாரப்பூர்வமற்ற  சமாதான பேச்சு வார்த்தையும் நடந்தேறியது. இதன் பிறகு பிரச்சினை தீரும் என  நினைத்த நிலையில் மீண்டும் பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஒருபுறம் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, உரிய மரியாதை கொடுப்பதில்லை, தங்கள் வார்டுகளுக்கு எந்தவித அரசு நல திட்ட பணிகளையும் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராடும் நிலையில், தற்பொழுது திமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது  மேயர் தரப்புக்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இன்று நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் கூட, அதிமுக கவுன்சிலர்கள்  முறைகேடுகளை தடுக்க வேண்டுமென பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.