கோயில் நகரம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கைத்தறி பட்டுக்கு பிரபலமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெயர் கோயில் நகரம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் காஞ்சிபுரம் முழுவதும் கோயில்கள் நிறைந்த ஊராக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாநகரத்தை கோயில்களில் வைத்து இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று சிவகாஞ்சி மற்றொன்று விஷ்ணு காஞ்சி. சிவன் கோயில்கள் அதிகம் இருக்கும் இடங்கள் சிவ காஞ்சி (பெரிய காஞ்சிபுரம் ) என்றும், திருமால் கோயில்கள் அதிகம் உள்ள பகுதியை, விஷ்ணு காஞ்சி ( சின்ன காஞ்சிபுரம் ) என்று அழைத்து வருகின்றனர் .
முக்தி தரும் ஏழு நகரங்கள்
அயோத்தி, மதுரா, அரித்துவார், வாரணாசி ,காஞ்சிபுரம், உஜ்ஜைன், துவாரகை ஆகிய ஏழு நகரங்களும் முக்தி தரும் நகரமாக இந்து மக்களால் நம்பப்படுகிறது. அந்த வகையில் அவற்றில் காஞ்சிபுரம் நகரமும் ஒன்று என்பதால், காஞ்சிபுரத்திற்கு கூடுதல் சிறப்பு உள்ளது.
மகா சிவராத்திரி ( Maha Shivaratri 2024 )
மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதியில் வரும் தேய்ப்பிறையே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இப்போது முதலே சிவாலயங்களிலும் சிவ பக்தர்களும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நன்னாளில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வணங்கி பூஜித்தால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும். சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியில். கோவிலுக்கு சிறப்பு மிக்க காஞ்சிபுரம் நகரத்தில், நீங்கள் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் , இறவாதீஸ்வரர் கோயில் ( அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில் ) குறித்து பார்க்கலாம் .
காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்)
நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில், பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. சுவர்களின் தூண்களைப் போன்று நின்ற நிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது.
பல்லவர்களுக்கே உரித்தான சோமாஸ்கந்தர் கருவறை, குஞ்சித கரண தாண்டவம், ஜலந்தரஸம்ஹர மூர்த்தி,கால ஸம்ஹர மூர்த்தி , கங்காதர மூர்த்தி, பிச்சாடனர் , அழகிய கொற்றவை என பல அழகிய சிற்பங்கள் கொண்ட கோயில் இது. மார்கண்டேயர், சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது. இக்கோயில் குறித்த தகவல்கள் காஞ்சி புராணத்தில் காணப்படுகிறது.
மார்க்கண்டேயர்
மிருகண்டு முனிவரின் மகனாக பிறந்த மார்க்கண்டேயர். மார்க்கண்டேயர் எதிர்காலம் குறித்த அறிய அவரது தந்தை மிருகண்டு முனிவர் ஜோதிடம் பார்த்த பொழுது, 16 வயதில் அவன் இறந்து விடுவான் என கூறப்பட்டது மற்ற ஞானிகளும் , அவ்வாறு நடக்கும் என கூறியதால், மிருகண்டு அதிர்ச்சி அடைந்தார். பெற்றோர் மார்க்கண்டேயர் நினைத்து தினமும் வருந்தி வந்த நிலையில், மார்க்கண்டேயர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது.
சிவபெருமானிடம் பூரணமாகச் சரணாகதி அடைந்தான். மார்க்கண்டேயர் உயிர் பிரியும் நாள் என்று சிவ பூஜையில் தன்னை மறந்து, சிவ வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளார். அப்பொழுது எமது தூதர்கள் அவர் உயிரை எடுக்க முயற்சி செய்த பொழுது பலன் அளிக்கவில்லை. இறுதியில் எமதர்மனே நேரில் வந்து பாச கயிறை வீசுகிறான், அப்பொழுது சிவலிங்கத்தை கட்டிப்பிடித்த மார்க்கண்டேயர், என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார், என்றும் 16- வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார் என்பது நம்பிக்கை. சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது.
அமைவிடம்
கம்மாளத் தெரு - காஞ்சிபுரம்
புதிய ரயில் நிலையம் அருகில்