காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பட்டா இடத்தில் வீடு கட்டும் கட்டுமான வேலைகளை தடுத்து நிறுத்தியதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாய் தலைகாணியுடன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
நிலப் பிரச்சனை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன், லட்சுமி தம்பதியினர். இவர்கள் வாசுதேவன், வசந்த் ஆகிய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு சிறியதாக இருந்த நிலையில் அதனை அகற்றி பட்டா இடத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடு கட்டுமான வேலைகளை செய்து வந்துள்ளனர். அதில், வீட்டு அருகே கன்னியப்பன் அனுபவத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு கொஞ்சம் இடத்தையும் சேர்ந்து, கன்னியப்பன் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.
வீடு கட்டுவதற்கு மற்றொரு நபர் எதிர்ப்பு
இந்நிலையில் அதே கிராமத்தில் கன்னியப்பன் வீட்டு பக்கத்து தெருவில் வசித்து வரும் நபர் ஒருவர் அந்த நத்தம் புறம்போக்கு இடம் தங்களுக்கு சொந்தம் என்று, கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வீடு கட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கன்னியப்பன் வீட்டில் தொழிலாளர்கள் ரூப் ஜல்லி போடும் கட்டுமான பணிகளை செய்து கொண்டு இருந்தபோது, எதிர் தரப்பினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில், வட்டாட்சியர் உத்தரவின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவி அலுவலர் ஆகியோர் கன்னியப்பன் வீடு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
இச்சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வருவாய் துறையினர் வீடு கட்டுமான பணிகளை நிறுத்தியதால், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை கன்னியப்பன், லட்சுமி, வாசுதேவன் வசந்த் ஆகிய குடும்பத்தினர் நான்கு பேரும் முற்றுகையிட்டு, எதிர் தரப்பு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தாருடன் பாய், தலைகாணி உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இரவு நேரத்தில் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
தகவல் அறிந்து சார் ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அலுவலகத்திற்கு வருகை தந்து உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்டிருந்த குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலந்து சென்றனர். நள்ளிரவில் குடும்பத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது