காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருகின்ற 03.01.2024 முதல் 27.01.2024 வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. சுய தொழில் தொடங்க விரும்புவோருக்கு, வங்கிக் கடன் பெற இம்முகாம்களில் பதிவு செய்து கொள்வதன் மூலம் விரைவில் பயன்பெறலாம்.
சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த இளையோரும், பொதுமக்களும் புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, விலைப் பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வருகை தந்து மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடன் திட்ட விண்ணப்பம்
கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 03.01.2024 அன்று குஜராத்தி சத்திரம் – காஞ்சிபுரம் மற்றும் குணசுந்தரி திருமண மண்டபம் - மாங்காடு ஆகிய இடங்களிலும், 04.01.2024 அன்று அண்ணா அரங்கம் காஞ்சிபுரம் மற்றும் சமுதாய கூடம் சமத்துவபுரம் – ஏனாத்தூர் ஆகிய இடங்களிலும், 05.01.2024 தொண்டை மண்டல சைவ வேளாளர் சத்திரம், ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப் பள்ளி – களியனூர் ஆகிய இடங்களிலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்டுள்ள மக்களுடன் முதல்வர் முகாம்களை தொழில்முனைவோர்கள் பயன் படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்