ஸ்ரீபெரும்புதூர் அருகே பொது இடத்தில் குடித்த போலீசார் உட்பட இருவரை பீர் பாட்டிலால் தாக்கியதால் இருவரும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

"ஒழுங்கா இங்க இருந்து போயிடு"


காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமீம் வ/37. இவர் நேற்று மாலை எழுச்சூர் அடுத்த ஏனாம் பூண்டியை பகுதியை சேர்ந்த தனது  நண்பர் சுரேஷ் (வ/34) என்பவருடன், ஒரகடம் அருகே உள்ள பனையூர் அடுத்த மதுவந்தாங்கல் அருகே மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த பனையூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வ/40) விக்னேஷ் (வ/20) ஆகிய இருவரும் சுரேஷிடம் உங்க ஊருல குடிக்காம, இங்க வந்து ஏன் குடிக்கிற, இது கிரிக்கெட் விளையாடும் கிரவுண்ட் அதனால் இங்கே பாட்டிலை தூக்கி போடாத, ஒழுங்கா இங்க இருந்து போயிடு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தப் பகுதியில் இதுபோல மர்ம நபர்கள் கிரிக்கெட் கிரவுண்டில் வந்து, சரக்கடித்துவிட்டு அந்த பாட்டிலை உடைத்து விட்டு செல்வதாகவும் எனவே இந்த இடத்தில் குடிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 



இங்கு குடிக்காதீர்கள்


இதுபோன்று பாட்டில்களை உடைத்து விட்டு சில குடிகாரர்கள் செல்வதால், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களால் இங்கு கிரிக்கெட் விளையாட முடியவில்லை, சில நேரங்களில் அந்த பாட்டில்கள் காலில் கிழித்து ரத்தம் வழிகிறது. எனவே இங்கு குடிக்காதீர்கள் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாக்குவாதம், எல்லையை மீறத் துவங்கியுள்ளது.‌ காவலர் தமிழ் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும், சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை மிரட்டியும் உள்ளனர். 



கீழே கிடந்த பீர்பாட்டில்


 

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் வெங்கடேசன், விக்னேஷ் ஆகிய இருவரும் தனது ஊரை சேர்ந்த, மேலும் இரண்டு பேரை அழைத்து வந்து போலீஸ் தமீம், சுரேஷிடம் சண்டையிட்டனர். பனையூரை சேர்ந்த நான்கு பேரில் ஒருவர் கீழே கிடந்த பீர் பட்டிலை எடுத்து, சுரேஷ் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சுரேஷை தாக்க வந்த பொழுது தடுக்கவந்த போலீஸ் தமீம் தலையில் பட்டிலால் அடித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதால், ரத்தம் வெளியேறியுள்ளது.

 


தீவிர சிகிச்சை


இதில் கழுத்தில் குத்துபட்ட சுரேஷ் மற்றும் தமீமை இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு சுரேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வெங்கடேசனுக்கு இடது காதில் காயமும், விக்னேஷ்க்கு கண்ணில் காயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



 

விளையாட்டு மைதானத்தில் காவலர் குடிக்க சென்ற சம்பவத்தை தட்டி கேட்ட இளைஞர்கள் , காவலர் மற்றும் அவரது நண்பரையை தாக்கி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.‌ பொது இடத்தில் குடிக்க கூடாது என்ற விதி இருந்தும் , காவலர் ஏன் அங்கு குடிக்க சென்றார் என கேள்வி எழும்பியுள்ளது.‌ காவலர் மற்றும் அவரது நண்பரை தாக்கிய இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.