காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் தமிழர் திருநாள் கிராமிய விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாட்டு வண்டி பயணம், ஒயிலாட்டம், சிலம்பம், கபடி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். மாட்டு வண்டியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் ஜி.கே.வாசன் பயணம் செய்து விழா மேடைக்கு வந்து அடைந்தார். இதனை அடுத்து பல்வேறு போட்டிகளை நேரில் கண்டுகளித்தனர். 



 

கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகி அணியில் இணைந்து போட்டியிட்டார். மறுமுனையில் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் ஒரு அணியாக கலந்து கொண்டனர். இரு அணிகள் மோதியதில் ஜி. கே. வாசன் அணி கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்றது. தான் பெற்ற வெற்றியை இளைஞர் அணிக்கும் மாணவர் அணிக்கும் சமர்ப்பித்தார்.



 

இதனை அடுத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார். கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினர் மற்றும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் செய்திருந்தார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



 

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன் தெரிவித்ததாவது : மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்படுவது வதந்தி என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார், அது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, வதந்திக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

 

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இந்துக்களுக்கு  கோவில்கள், இஸ்லாமியர்களுக்கு மசூதிகள், கிறிஸ்தவர்களுக்கு தேவாலயங்கள், ஆகியவை வரலாற்று சிறப்புமிக்கது, என்றால் அதற்கு தனி மரியாதை உண்டு. ஜாதி, மதம் மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு ஒரு அரசியல் கட்சி அதனுடைய தலைமை என்றால், அந்த அரசியல் கட்சியில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடக்கிறது, அது கோவிலாக இருந்தாலும் சரி மசூதியாக இருந்தாலும் சரி, தங்களுடைய கட்சி  தொண்டர்கள்,  மனநிலையை கருதி அதில் கலந்து கொள்ள வேண்டும்.



இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்ற அறிவிப்பு , அவர்களுடைய உண்மையான முகத்தை காட்டுகிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல், நான் ராமர் கோவிலுக்கு செல்வேன் தரிசிப்பேன் . வருகின்ற 22 - ஆம் தேதி என்னுடைய கட்சி தொண்டரின் திருமணத்தை நான் திருவாரூரில் நடத்தி வைக்கிறேன். திருமணத்தில் கலந்து கொள்ள சமாதித்திருக்கிறேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் நான் கோவிலுக்கு சென்று நிச்சயம் தரிசிப்பேன் என தெரிவித்தார்.



 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பதில் அளித்து பேசுகையில், பேருந்து நிலையத்தில் பல வசதிகள் இருக்கலாம் , அதில் மாற்று கருத்து கிடையாது. அது எப்பொழுது வரவேண்டுமோ அப்பொழுது தான் வர வேண்டும். மெட்ரோ தொடர் வண்டி கிடையாது, போதிய அளவில் பேருந்துகள் கிடையாது. விளம்பரத்திற்காக மக்களை அலைக்கழிக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது என தெரிவித்தார். பல்வேறு கட்டிடங்களுக்கு ஒருவர் பெயர் வைப்பது குறித்து பதில் அளித்து பேசுகையில், ஆட்சியாளர்களின் தவறை சாதாரண மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தவறுகளுக்கான பாடத்தை அவர்கள் தங்களுடைய வாக்கின் மூலம் கொடுப்பார்கள் என்றார்.