காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாவதைக் கண்டித்து, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement


பயணிகள் போராட்டத்திற்கு காரணம் என்ன ?


தினமும் மாலை 6:30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார ரயில், வழக்கம் போல இரவு 8:30 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடைய வேண்டும். ஆனால், பாலூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் காரணமாக, இந்த ரயில் பாலூரில் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நிறுத்தப்படுகிறது.


இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்குத் திரும்பும் பயணிகள், தினமும் இரவு 9:30 மணிக்கு மேல் வீட்டை அடைவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று இதேபோன்ற தாமதம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரயில் தாமதமானதால், பொதுமக்கள் ஆத்திரமடைந்து தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். 


அதிகாரிகள் பேச்சுவார்த்தை 


சிலர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தொடர்ந்து ஏற்படும் இந்த தாமதம் குறித்து ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இதனால், தங்கள் வேலைகளை முடித்துவிட்டு உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த ரயில் மறியல் காரணமாக, அப்பாதையில் செல்ல வேண்டிய மற்ற ரயில்களும் தாமதமாகி வருகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக முன்பை - நாகர்கோவில் விரைவு ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


தீர்வுதான் என்ன ?


அரக்கோணம் -காஞ்சிபுரம் -செங்கல்பட்டியிலேயே இரண்டாவது தண்டவாளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள் ரயில் மூலமாக பயணித்து வருகின்றனர். இவர்கள் மூலம் ரயில்வே துறைக்கும் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அரக்கோணம் செங்கல்பட்டு இடையே, காஞ்சிபுரம் வழியாக இரட்டை ரயில் பாதை அமைக்கப்படாததே முதன்மை பிரச்சனை என பயணிகள் தெரிவிக்கின்றனர். விரைந்து இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது