கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த நிலையில் திமுக அரசை கண்டித்து பதவி விலக வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ், கருப்பு உடை அணிந்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி விவகாரம்


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த நிலையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலைசருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


 


கண்டனம் முழக்கம்


இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் நடைபெற்றது. அதிமுகவினர் கருப்பு பேட்ஜ், கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டு கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று  முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்து பதவி விலக கோரியும், தமிழக அரசுக்கு எதிராகவும், கட்டுபடுத்த தவறிய முதலமைச்சரை கண்டித்து எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தின் பொழுது திமுக விற்கும் மற்றும் தமிழ்நாடு அரசிற்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாட்டு அரசுக்கு தெரிந்து  பகுதியில், கள்ளச்சாரம் வியாபாரம் நடைபெற்று வந்ததாகவும், காவல்துறையினருக்கு அது குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் ‌.





சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் 




இன்று நடைபெற்ற அதிமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அதிமுகவின் ஐடி - விங் பிரிவினர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒருபுறம் கண்டனம் முழுக்க போராட்டம் , மறுபுறம் சாலை மறியல் போராட்டம் ஆகியவை நடைபெற்றதால் காஞ்சிபுரம் நகரம் பரபரப்புடன் காணப்பட்டது.