மிசோரம் மாநில முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா இன்று பதவியேற்றுள்ளார்.
மிசோரம் அரசியலை திருப்பிப்போட்ட தேர்தல்:
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக இருந்த மிசோரமுக்கு கடந்த 1987ஆம் ஆண்டு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து, காங்கிரஸ் கட்சியும் மிசோ தேசிய முன்னணியும்தான் அம்மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இச்சூழலில், மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள், டிசம்பர் மாதம் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி ஆகிய இரு பெரும் கட்சிகளையும் தோற்கடித்து ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது.
இந்த நிலையில், ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். ஐஸ்வாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அமைச்சராக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ஆம் தேதி, ஜோரம் மக்கள் இயக்க சட்டப்பேரவை குழு தலைவராக லால்துஹோமாவை அக்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டுதான், ஜோரம் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிக்கும் நோக்கில் காங்கிரஸ் அல்லாத மிசோ தேசிய முன்னணி அல்லாத 6 சிறிய கட்சிகளையும் அரசு சாரா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஜோரம் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது ஜோரம் மக்கள் இயக்கம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இல்லை. மாறாக, அப்போது, அரசியல் கூட்டமைப்பாக இருந்தது. எனவே, அந்த தேர்தலில் 38 சுயேச்சை வேட்பாளர்களை ஆதரித்தது. அவர்கள் ஆதரித்த வேட்பாளர்களில் எட்டு பேர் வெற்றி பெற்றனர். மேலும், இந்த அரசியல் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
யார் இந்த லால்துஹோமா?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது, அவரின் பாதுகாப்புப் பொறுப்பாளராக பணியாற்றியவர். இவர் 1984 இல் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் சேர்ந்தார். மேலும் அந்த ஆண்டின் இறுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கடந்த 1988 இல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார் லால்துஹோமா. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் எம்.பி. இவர்தான். அப்போதில் இருந்து, மாநில அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஜோரம் தேசியவாத கட்சியை தொடங்கி அவர், கடந்த 2003 மற்றும் 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார்.
மிசோர மாநில முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் லால் தன்ஹாவ்லாவை செர்ச்சிப் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கிய லால்துஹோமா தோற்கடித்தார். பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு, ஜோரம் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.