ஜொமாட்டோ, ஸ்விக்கி முதலான உணவு டெலிவரி ஆப் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் அதிக உழைப்பைச் சுரண்டுவதாகத் தொடர் சர்ச்சைகளைக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், இதே விவகாரம் ட்விட்டர் பதிவு ஒன்றின் காரணமாக மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தனது பர்ஸ் திருடப்பட்ட பிறகும், ஜொமாட்டோ டெலிவரி மேற்கொள்ளும் நபர் ஒருவர் தனது டெலிவரியை முடித்திருப்பது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சச்சின் கல்பாக் என்ற அவரின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
ஜொமாட்டோ டெலிவரி மேற்கொண்ட மனிஷ் பகேலுராம் குப்தாவைப் பாராட்ட சச்சின் கல்பாக் பதிவிட்ட பிறகு, அது பேசுபொருளாகி சில சர்ச்சைகளையும் ஈர்த்துக் கொண்டது. இந்த விவகாரம் குறித்த எதிர்வினைகள் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கலந்து இருந்தன. பெரும்பாலான நபர்கள் மனிஷ் உணவை டெலிவரி செய்ததற்குக் காரணம், அவர் தனது பணியை இழந்துவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே என உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் அழுத்தத்தை விமர்சனம் செய்து பதில் ட்வீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
சச்சின் கல்பாக் எழுதிய ட்விட்டர் பதிவின் பதில்களைப் பார்க்கும் போது இந்த விவகாரத்தைப் புரிந்து கொள்ளலாம். அவரது பதிவில், தனது மனைவி சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்ததாகவும், 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்பட வேண்டிய உணவு, தாமதாக சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தாமதம் குறித்து ஜொமாட்டோ ஆப் மூலமாக டெலிவரி செய்யும் நபரிடம் பேசிய போது, அவர் தனது பர்ஸ் திருடப்பட்டிருப்பதாகவும், அடுத்த 15 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். சொன்னபடியே, அடுத்த 15 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆர்டரைக் கேன்சல் செய்துவிட்டு, தொலைந்த பர்ஸைத் தேடுமாறு சச்சின் கல்பாக்கின் மனைவி தெரிவித்த பிறகும், மனிஷ் உணவை டெலிவரி செய்தது அத்தம்பதியை ஈர்த்துள்ளது.
சச்சின் மனிஷுக்குப் பணம் அளித்த போது, அதனை வாங்க மறுத்த அவர், `பர்ஸ் காணாமல் போனதற்கும், உங்களுக்கும் தொடர்பு இல்லை’ என்று கூறியுள்ளார். எனினும் அவர் தனது ஓட்டுநர் உரிமம், பணம் ஆகியவற்றை இழந்ததற்காக மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார். தனது குழந்தையின் ஆன்லைன் கல்விக்காக அவர் மிகுந்த கடனில் இருப்பதாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார். புதிய ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு ஏஜெண்ட்களிடம் லஞ்சம் அளிக்க வேண்டி வரும் எனவும் மனிஷ் கூறியதாக சச்சின் பதிவிட்டுள்ளார்.
முடிவாக, மனிஷ் மேற்கொண்ட முடிவு அவரது அப்போதைய நிலைமையைவிட அவர் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாகப் பாராட்டுகளுடன் பதிவிட்டுள்ளார் சச்சின் கல்பாக். எனினும், உணவு டெலிவரி ஆப்களில் தொழிலாளர்களின் இப்படியான நிலையைக் குறித்து விமர்சனம் செய்யத் தொடங்கினர் இணையவாசிகள்.
நல்ல பணிச்சூழல் வேண்டி டெலிவரி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் அடிக்கடி இந்த டெலிவரி நிறுவனங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு நகரங்களில் அடிக்கடி போராட்டம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.