கேரளாவில் வெள்ள நீருக்கு நடுவே பெரிய பாத்திரத்தை படகு போல மாற்றி அதில் பயணம் செய்து திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. 


தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றதால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.


திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர,மற்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாது பெய்தமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.




ஆயிரக்கணக்கான மக்கள் கடும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். சாலைகளும் மூழ்கியுள்ளன. பேருந்துகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலபேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில், ‘இவ்வளவு பிரச்சினைக்கும் நடுவில் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்பதுபோல வெள்ளநீர் சுற்றிலும் சூழ்ந்திருக்க பெரிய பாத்திரத்தை படகு போல் மாற்றி அதில் அமர்ந்தபடியே திருமணம் நடைபெறும் இடத்தை சென்றடைந்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ்- ஐஸ்வர்யா ஆகிய தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று திருமணம் நடைபெறவிருந்த சூழலில் வெள்ளம் சூழ்ந்துக் கொண்டது. இதையடுத்து அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாது பெரிய பாத்திரத்தை படகாக மாற்றி தங்கள் திருமணத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள் அந்த தம்பதி. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


வெள்ளநீர் சுற்றிலும் சூழ்ந்திருக்க பெரிய பாத்திரத்தை படகு போல் மாற்றி அதில் அமர்ந்தபடியே திருமணம் நடைபெறும் இடத்தை சென்றடைந்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர்