உணவு டெலிவரி செய்யும் பயணத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், டெலிவரி பணியில் ஈடுபடுவோர்களுக்கு ஓய்வு எடுக்கும்  வகையில் பொது இடங்களில் ஆங்காங்கே ஓய்வறைகள் ( Rest Point ) ஏற்படுத்தி தரும் திட்டத்தை ஜோமேட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 


நினைத்தவுடன் சாப்பாடு கிடைக்குமா? என்றால் இப்போது சாத்தியம் என்றே சொல்லலாம். ஆம். இருக்கும் இடத்திற்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை வளர தொடங்கியுள்ளன. இதில் ஸ்விக்கி, ஜோமேட்டோ ஆகிய இரண்டும் பிரபலமானவை. 24 மணிநேர உணவு டெலிவரி செய்யும் வசதியின் மூலம் பயனர்களுக்கு தங்களது சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதே வேளையில், இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்ற கருத்துகளும் எழுந்தன.


பயனர்களுக்கு ஆஃபர்கள் உள்ளிட்டவைகள் வழங்குவதோடு, தங்களது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஊழியர்களின் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள தொடங்கியிருக்கிறது ஜோமேட்டோ நிறுவனம் எனலாம். அந்த வகையில், மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உணவு டெலிவரி செய்பர்களுக்கு ’ The Shelter Project ' என்ற திட்டத்தின் கீழ் பொது இடங்களில் ஓய்வெடுக்கும் வசதியினை  ( Rest Points) ஏற்படுத்தி தர இருக்கிறது. 


இது தொடர்பாக ஜோமேட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது உணவு டெலிவரி செய்பவர்களின்றி சாத்தியம் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்கள் ஊழியர்களின் நலனையும்  முக்கியமானதாகவே கருதுகிறோம். உணவு டெலிவரி பயணத்தில் ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதை தெரிந்துகொண்டோம். போக்குவரத்து நெரிசல், வெயில், மழை என்று பல்வேறு சூழ்நிலையிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு தீர்வாக பொது இடங்களில் அவர்களுக்கான ஓய்வு வசதிகளுடன் ஓர் அறை ஏற்படுத்தி தர முடிவு செய்தோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத்திட்டத்தின் மூலம் குருகிராமில் (Gurugram) இரண்டு ஓய்வறையில் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஜோமேட்டோவின் ஓய்வு அறை வசதி: 


மற்ற நகரங்களில் ஆங்காங்கே இந்த ஓய்வு வசதி திட்டம் விரைவில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உணவு டெலிவரி பயணங்களுக்கு இடையில் சற்று இளைப்பாறிவிட்டு செல்லும் வகையில் சிறிய அளவிலான அறை அமைக்கப்பட்டுள்ளது. கழிவறை, குடிநீர், ஸ்மாட்ஃபோன் சார்ஜிங் செய்யும் வசதி, வேகமான இணையதள வசதி, 24 மணி நேர உதவி சேவை, முதலுதவி சேவை உள்ளிட்ட வசதிகள் இந்த அறையில் வழங்கப்பட்டுள்ளன. 


டெலிவரி செய்பவர்கள் பணி நேரங்களுக்கு இடையே எடுக்கும் சிறிய ஓய்வின் மூலம் புத்துணர்ச்சியாக உணரலாம் என்று நம்புவதாகம் ஜோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.