நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல் கட்சி தலைவரான ஃபஹத் ஜிரார் அகமத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.


டிவிட்டர் பதிவு:


இதுதொடர்பாக டிவிட்டரில் ஸ்வரா பாஸ்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”சில சமயங்களில் உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றை நீங்கள் தொலைவில் தேடுகிறீர்கள். நாங்கள் அன்பைத் தேடினோம், ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் ஒருவரையொருவர் கண்டுபிடித்தோம்! என் இதயத்திற்கு வருக ஃபஹத் ஜிரார் அகமத். இது குழப்பமாக இருக்கிறது, ஆனால் அது உங்களுடையது!” என பதிவிட்டுள்ளார்.






திருமண அறிவிப்பு:


அதோடு இணைத்துள்ள வீடியோவில், தனது கணவரான ஃபஹத் ஜிரார் அகமத் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று கைதானது, சமூகத்தின் மீதான தனது பார்வை, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஃபஹத்துடன் சேர்ந்து ஒன்றாக போரட்டங்களில் ஈடுபட்டது, முதன்முதலில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி, பகிர்ந்துகொண்ட பரிசுகள், தங்களுக்கு இடையேயான குறுந்தகவல்கள், தங்களை இணைத்த செல்லப்பிராணியான பூனைகள், தொலைபேசி உரையாடல்கள், கடந்த 6ம் தேதி சிறப்புச் சட்டத்தின் கீழ் பதிவு திருமணம் செய்து கொண்டது, அதற்கான ஆவணங்கள் தொடர்பான காட்சிகளை இணைத்துள்ளார். இந்த புதுமண தம்பதிக்கு சமூகவலைதளங்களில் பலரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ஸ்வரா பாஸ்கர்:


கடந்த 2009ம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றி வரும் டெல்லியை சேர்ந்த 34 வயதான ஸ்வரா பாஸ்கர் பல்வேறு சமூக சீர்திருத்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனு வெட்ஸ் மனு வெட் படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மூன்று முறை ஃபிலிம் ஃபேர் விருதுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பேசுபொருளாக மாறும் பல்வேறு சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதோடு, பல்வேறு போராட்டக்களங்களிலும் நேரடியாக பங்கேற்று தனது ஆதரவை ஸ்வரா பாஸ்கர் வெளிப்படுத்தி வருகிறார்.


ஃபஹத் ஜிரார் அகமத்:


சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அணி பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 31 வயதான ஃபஹத் ஜிரார் அகமத். தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், ஆளும் பாஜக, மதவாத சக்திகளுக்கு எதிராகவும்,  சமூக நீதிக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களில் களமிறங்கி வருகிறார்.