அண்மையில் ட்விட்டரில் கஸ்டமர் ஒருவர் சோமாட்டோ ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனத்திடம் எழுப்பிய புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தான் ஆர்டர் செய்த உணவு டெலிவரி செய்யப்படாததை அடுத்து சொமாட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்புகொண்டு பேசிய விகாஷிடம் இணைப்பில் அந்தப் பக்கம் இருந்தவர் ‘இந்தி தேசிய மொழி. உணவு ஆர்டர் செய்யும் எல்லோருக்கும் இந்தி கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்’ என்று கூறியதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம். இந்தி தெரிய வேண்டுமென  தமிழ்நாட்டில் சொன்னதுதான் சொமாட்டோ செய்த தவறு இதனால் கொதித்தெழுந்தது சோஷியல் மீடியா. ட்ரெண்ட் செய்து அடித்த  அடியில் பணிந்தது சொமாட்டோ.  






சமூக வலைதளத்தில் ரிஜக்ட் சோமாட்டோ ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் அறிவித்துள்ளது சோமாட்டோ. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சொமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் ஆதரவு மையத்தில் யாரோ ஒருவர் செய்த அறியாத தவறு ஒரு தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இப்போதையதை விட அதிகமாக இருக்க வேண்டும். இங்கு யாரைக் குறை சொல்வது எனத் தெரியவில்லை. நாங்கள் அந்த பெண்ணை மீண்டும் வேலைக்கு பணியமர்த்துகிறோம். வேலையை விட்டு நீக்குவது மட்டுமே எந்த பயனையும் அளிக்காது. அவர் மேலும் கற்றுக்கொண்டு முன்னேறிச்செல்ல வேண்டும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்,  எங்களது கஷ்டமர் கால்செண்டரில் வேலைபார்ப்பவர்கள் இளைஞர்கள். 




அவர்கள் இப்போதுதான் தங்களது தொழிலை கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மொழி மீதும், உள்ளூர்உணர்வுகள் குறித்தும் ஏதும் அறியாதவர்கள். நானும் கூடத்தான். சொல்ல வேண்டியது என்னவென்றால், நம்முடைய குறைகளை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். சகித்துச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரின் மொழிகளையும், உள்ளூர் உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும். தமிழ்நாடே, நாட்டின் மற்ற பகுதிகளை விரும்புவதைப் போலவே நாங்கள் உங்களையும் விரும்புகிறோம். ஏற்ற இறக்கம் ஏதுமில்லை. நாம் அனைவரும் சமமானவர்கள்” என்றார். 






பிரச்னைக்கு விளக்கம் அளித்து சொமாட்டோ நிறுவனர் போட்ட ட்வீட்டே மீண்டும் பூகம்பத்தை கிளப்பத் தொடங்கியுள்ளது. ஒரு சின்ன தவறு தேசிய பிரச்னையா? என்று கேள்வி எழுப்பிய தீபிந்தருக்கு எதிராக பலரும் பதில் அளித்துள்ளனர்.  தேசிய மொழி என்று ஒன்றே இல்லாத போது ஒரு மாநிலத்தின் மொழியை மட்டப்படுத்துவது தேசிய பிரச்னை தான். இந்தியை தேசிய மொழி எனக் கூறுவது இந்தி பேசாத மாநிலங்களை அந்நியமாகவே உணரச் செய்கிறது என பதில் அளித்து வருகின்றனர். மேலும் சிலர், இந்த பிரச்னைக்காக யாரையும் வேலையை விட்டு நீக்க வேண்டியதில்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதுவும் ஒரு தேசிய பிரச்னை தான். அதனை நீங்கள் எளிதாக கடக்க வேண்டாம் என பதிலளித்து வருகின்றனர்.