கொரோனா முதல் அலையின் போது அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நேரத்தின் போது, 12 மாத காலத்தில் அசாம் தொடங்கி தமிழகம் வரை 12 மத்திய அமைச்சர்கள் என்னென்ன சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள் என்பதனை பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளிப்படையாக வெளியிட்டுள்ளனர். இதில் டெல்லியில் உள்ள அடுக்குமாடி கட்டடம், விவசாய நிலங்கள், காலிமனையிடங்களும் அடங்கும். கேபினட், இணை பொறுப்பு என மொத்தம் உள்ள 78 மத்திய அமைச்சர்களில், 2020-21 நிதியாண்டில் சொத்துக்களை வாங்கியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மகளிர் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் என 3 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 12 அமைச்சர்களும் 21 சொத்துக்களை வாங்கியுள்ளனர். இவற்றில் 7 விவசாய நிலங்கள். ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 5 பேர் தத்தமது சொந்த தொகுதிகளில் இடம் வாங்கியுள்ளனர். இந்த 12 அமைச்சர்கள் அல்லாது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது 2 சொத்துக்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தெற்கு டெல்லியின் வசந்த் விகார் பகுதியில் 3,085.29 சதுர அடி பரப்பிலான 2வது தளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை 3.87 கோடி ரூபாய் மதிப்பில் தனது மனைவியுடன் இணைந்து ஜெய்சங்கர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வாங்கியுள்ளார். ராகுல் காந்தியை வீழ்த்திய அமேதி தொகுதியில் உள்ள மேதன் மவாய் எனும் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி 0.1340 ஹெக்டர் பரப்பிலான 12.11 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஸ்மிருதி இரானி வாங்கியிருக்கிறார். சர்பானந்த சோனாவால் அசாம் முதல்வராக இருந்த போது திப்ருகரில் கடந்த பிப்ரவரி மாதம் 3 சொத்துக்களை வாங்கியிருக்கிறார். கடந்த ஜூலை மாதம் இவர் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார். இவர் வாங்கிய சொத்துக்கள் ரூ.6.75 லட்சம், ரூ14.40 லட்சம் மற்றும் ரூ.3.60 லட்சம் மதிப்பிலானவை. ஸ்ரீபத் எசோ நாயக்கின் தொகுதியான வடக்கு கோவாவில் இரண்டு வீட்டடி மனைகள் மற்றும் ஒரு குடியிருப்பை வாங்கியிருக்கிறார். 1283.29 சதுர அடி பரப்பிலான ரூ.7.23 லட்சம் மதிப்பிலான இடம் மற்றும் 188.37 சதுர அடி பரப்பிலான ரூ.1.08 லட்சம் மதிப்பிலான இடம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். மேலும் 40.95 லட்சம் மதிப்பிலான 968 அதுர அடி பரப்பு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியிருக்கிறார்.
கிரிஷன் பால் குர்ஜார், அவருடைய தொகுதியான ஹரியானாவின் பரிதாபாத்தில் வேறு சிலருடன் இணைந்து 3 விவசாய நிலங்களை 1.47 கோடி, 1.95 கோடி மற்றும் 4.21 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளார். கான்பூரில் 1.214 ஹெக்டர் மதிப்பிலான நிலத்தை 36.42 லட்ச ரூபாய்க்கு சாத்வி நிரஞ்சன் ஜோதி வாங்கியுள்ளார். ஜான்சியின் பெத்வா விகார் பகுதியில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு மனையை பானு பிரதாப் சிங் வெர்மா வாங்கியுள்ளார். அன்னபூர்னா தேவி ஜார்க்கண்டின் கோடர்மா மற்றும் ராஞ்சியில் 3.12 லட்சம் மற்றும் 9.75 லட்சம் மதிப்பிலான இரண்டு நிலங்களை தனது மகன் வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். பி.எல்.வெர்மா உ.பி மாநிலம் பதான் பகுதியில் 3,126 சதுர அடி நிலத்தை 52 லட்ச ரூபாய் மதிப்பில் வேறு ஒருவருடன் இணைந்து வாங்கியுள்ளார். தேவுசின் சவுகான் குஜராத்தின் நதியாட் எனும் தனது தொகுதியில் 5.79 ஏக்கர் விவசாய நிலத்தை 30.43 லட்சம் மதிப்பில் தனது மனைவி வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். மகேந்திர முன்சிபாரா குஜராத்தின் சுரேந்திரநகர் எனும் அவரின் தொகுதியில் 42,500 ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2020 ஜூலை 2ம் தேதி 5.73 லட்ச ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை தனது மனைவி வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.