ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்த கர்ப்பிணி பெண்னை ரயில்வே போலீசார் கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த செயலை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
மும்பை கல்யாண் ரயில் நிலையத்தில் நேற்று ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை, ரயில்வே கான்ஸ்டபிள் காப்பாற்றியது அங்குள்ள சிசிடிவி காட்சியின் பதிவானது.
21 வயதான வந்தனா, தனது கணவர் சந்திரேஷ் மற்றும் குழந்தையுடன் பயணம் செய்து, கல்யாணில் இருந்து கோரக்பூருக்கு ரயிலில் ஏற வேண்டும். ஆனால், அவர்கள் வேறு ரயிலில் ஏறிவிட்டனர். அவர்கள் இதை உணரும் நேரத்தில், ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. 8 மாத கர்ப்பிணியான வந்தனா ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, தன்னை சமநிலைப்படுத்த முடியாமல் தடுமாறினார். உடனே, இதணைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் எஸ்.ஆர்.கண்டேகர், ரயிலில் இருந்து கீழே விழுந்த கர்ப்பிணியை தண்டவாளத்தில் விழாமல் இருக்க காப்பாற்றினார். பின்னர், அந்தப் பெண், காயமின்றி தனது குடும்பத்துடன் கோரக்பூர் செல்லும் ரயிலில் ஏறினார்.
மும்பையில் உள்ள மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர், தனது டுவிட்டர் பக்கத்தில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்