Zika Virus : கர்ப்பிணி ஒருவரைத் தொடர்ந்து கேரளாவில் மேலும் 14 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு..!

கேரளாவில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஸிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேலும் 14 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. அப்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த எட்டு மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக இருந்தது. பின்னர், படிப்படியாக கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அந்த மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் இருந்து கேரளா இன்னும் முழுமையாக மீளாத நிலையில், ஸிகா வைரசின் பாதிப்பு கேரளாவில் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள செறுவார கோணம் பகுதியயைச் சேர்ந்தவர் 24 வயதான கர்ப்பிணிப் பெண்.

Continues below advertisement


அவருக்கு தொடர்ந்து காய்ச்சல், தலைவலி இருந்த காரணத்தால் அருகில் இருந்த திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்த காரணத்தால் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா மற்றும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எந்த வியாதியும் அந்த பெண்ணிற்கு இல்லை என்று வந்துள்ளது. ஆனாலும், அந்த பெண்ணிற்கு காய்ச்சல் குறையாமல் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. இதையடுத்து, அந்த பெண்ணின் ரத்த பரிசோதனை மாதிரிகளை கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்தனர்.

பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணிற்கு ஸிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினர்கள், அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனை அருகே தங்கியிருந்த வீடு அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த 30 பேர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர், அந்த ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் மேலும் 14 நபர்களுக்கு ஸிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படும். ஏடிஸ் கொசுக்கள் இந்த ஸிகா வைரஸ் பரவுகிறது. ஏடிஸ் கொசுக்களால் ஸிகா வைரஸ் மட்டுமின்றி மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவையும் ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஸிகா வைரஸ் பரவினால் அவர்கள் மூலமாக, கருவில் உள்ள சிசுக்களுக்கும் ஸிகா வைரஸ் பரவுவதற்கான ஆபத்தும் உள்ளது. இதனால் அந்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு சில சமயங்களில் ஏற்படுவதற்கான ஆபத்தும் உள்ளது. இதுமட்டுமின்றி, ஸிகா வைரசால் பாதிக்கப்பட்ட நபருடன் உடல்ரீதியாக உறவு கொண்டாலும் அந்த வைரஸ் உறவு கொள்ளும் நபருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  ஸிகா வைரஸ் உடலில 3 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இருக்கும். உடலில் பாதிப்பு ஏற்பட்டவுடன் 2 முதல் 7 நாட்களுக்குள் அறிகுறிகள் காணப்படும். உலகளவில் ஸிகா வைரசுக்கென்று எந்த தடுப்பூசியும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஸிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளையும் தற்போது கேரள மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola