கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுடன் கைகோத்துள்ளது ஜிகா வைரஸ். அதுவும் இந்த வைரஸால் கர்ப்பிணிகளுக்குத் தான் பேராபத்து என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது. இது ஆபத்தானது அல்ல. இதற்கு மருத்துவமனை சிகிச்சையும் தேவைப்படாது. இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் பாதித்தால் கரு பாதிக்கப்படும். பொதுவாக, ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே அறிகுறிகளோடு கொடிய நோய் தொற்று உண்டாகிறது.
ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அதிகமான ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கு மருத்துவம் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. கொசுக்கடிகளைத் தவிர்ப்பதன் மூலமே ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்க முடியும். ஜிகா வைரஸ் பாதிப்புக்குக் காரணமான கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். பாத்திரங்களில், பழைய டயர்களில், வீட்டின் மூலைகளில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும்.
ஜிகா வைரஸ் மற்றவருக்கு எச்சில் ரத்தம் உடல் உறுப்பு தானம், பாலியல் உறவு மூலமாக மற்றவருக்கு பரவலாம். தாய்ப்பால் மூலமாகவும் பரவும். ஜிகா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய NAT மற்றும் RT PCR சோதனைகள் ரத்தம் மற்றும் சிறுநீரில் செய்யப்படுகின்றன.
கர்ப்பிணிகளுக்கு ஏன் ஆபத்தானது?
பொதுவாக எந்த ஒரு வைரஸ் தொற்றானாலும் கர்ப்பிணிகளின் நஞ்சுக்கொடி அதைத் தடுத்து குழந்தையை பாதிக்காமல் காப்பாற்றிவிடும். ஆனால் ஜிகா வைரஸ் நஞ்சுக்கொடியையும் தாண்டி கருவை பாதிக்கிறது. இதனால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம், வயிற்றுக்குள்ளேயே குழந்தை உயிர் இழத்தல் போன்ற தாக்கங்கள் ஏற்படுகின்றன. ஒருவேளை குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு மைக்ரோ செஃபாலோ என்ற தலை சூம்பிப்போதல் நோயின் தாக்கமாக ஏற்படுகிறது. தலை சிறியதாவதால் மூளையும் சிறுத்துப்போகிறது. இதனால், குழந்தைகளுக்கு அறிவுசார் குறைபாடு, தாமதமான வளர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றது.
இதனாலேயே கர்ப்பிணிகளை கொசுக்கடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யாமல் இருப்பது சிறந்தது. இதற்கும் ஒருபடி மேலாக ஜிகா வைரஸ் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பலருக்கும் ஏற்பட்டு நோய்த் தொகுப்பாக உருவாகியுள்ளதால் இந்த காலக்கட்டத்தில் கர்ப்பம் தரித்தலை தள்ளிவைக்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
இதேபோல் பெரியவர்களுக்கு கில்லன் பா சின்ட்ரோம் என்ற நோய் உண்டாகிறது. 'கீலன் பா சின்ட்ரோம்' (Guillain-Barré syndrome GBS) என்று அழைக்கப்படும் 'தன் தடுப்பாற்று நோய்' ஆகும். இதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தனது சொந்த நரம்பு மண்டலத்தை தவறாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். இதனால், பக்கவாதம் ஏற்பட்டு முழங்கால், முழங்கை அசைவில்லாமல் போகும் எனத் தெரிவிக்கப்படுகிறது