சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரும், யூடியூபருமான தேவராஜ் படேல் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கிடைத்த தகவலின்படி, யூடியூபர் தேவராஜ் படேல் ராய்பூரில் தனது யூடியூப் வீடியோவுக்காக கண்டெண்ட் எடுக்க சென்றபோது, பிற்பகல் 3.30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது தேவராஜ் படேல் மீது லாரி மோதியதில் தலை மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காயமின்றி தப்பிய பைக் ஓட்டிய ராகேஷ் மன்ஹர் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். அதை தொடர்ந்து, படேல் அதிவேகமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது அவர், இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
தேவ்ராஜின் படேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தேவ்ராஜின் பழைய வீடியோவை பகிர்ந்துகொண்டு, “"நம்மை சிரிக்க வைத்த தில் சே புரா லக்தா ஹையில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த தேவ்ராஜ் படேல் இன்று நம்மை விட்டு பிரிந்தார். இந்த இளம் வயதிலேயே அற்புதமான திறமை." அவரது இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் கடவுள் வழங்கட்டும். ஓம் சாந்தி” என பதிவிட்டு இருந்தார்.
யார் இந்த தேவ்ராஜ் படேல்..?
தேவ்ராஜ் படேல் மஹாசமுந்த் மாவட்டத்தின் தாப் பாலி கிராமத்தை சேர்ந்தவர். இவரது முழு குடும்பமும் இதே கிராமத்தில் வசித்து வருகிறது. தேவராஜ் பட்டேலுக்கு ஹேமந்த் படேல் என்ற சகோதரர் இருக்கிறார். இவரின் தந்தை கன்ஷியாம் படேல் விவசாயம் செய்கிறார்.
யூடியூப்பில் தேவராஜ் படேலுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவர் வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை பெறும். 2021 ஆம் ஆண்டில், டெல்லியின் பிரபல நகைச்சுவை நடிகர் புவன் பாமுடன் திந்தோராவில் பணியாற்றினார். இதனுடன், சத்தீஸ்கர் அரசாங்கத்தின் ஆவணப் படங்களில் தேவராஜ் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அதனால்தான் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் தேவ்ராஜ் படேலுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல்வருடன் தேவ்ராஜ் வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இது தவிர, தேவ்ராஜ் படேல் தனது கடைசி வீடியோவை இன்ஸ்டாகிராமில் நேற்று காலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.