புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை:
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமத்தை சந்தித்த நிலையில், லட்சக்கணக்கான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பொருளாதார ஆய்வறினர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டு வாபஸ் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது கேள்வியாக உள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். "திரும்பப்பெறும் உத்தரவை பிறப்பித்த ஒரு மாதத்திற்குள், 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வங்கிகளுக்கு திரும்பிவிட்டன.
2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்:
சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள், அதாவது, மார்ச் 31ஆம் தேதி வரையில், புழக்கத்தில் இருந்த சுமார் 50 சதவிகித நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. அதில், 85 சதவீதம் டெபாசிட்டாகவும் மீதமுள்ளவை வேறு நோட்டுகளாகவும் திரும்ப அளிக்கப்பட்டுள்ளன" என்றார்.
மார்ச் 31ஆம் நிலவரப்படி, 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில், 2.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது. இது, திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.
கடந்த வாரம், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்து சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில், "புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிடம் திருப்பி அளிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு என்பது மாற்ற முடியாத ஒன்று அல்ல.
மக்கள் தங்கள் பணத்தைக் கோருவதற்கு அவசரப்பட வேண்டியதில்லை. திரும்பப் பெறுதல் நிதி ஸ்திரத்தன்மையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் பொருளாதாரத்தில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் நான் காணவில்லை" என்றார்.
சில காலமாகவே மக்களின் செலவிடும் திறன் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முடிவால் நுகர்வோர் அதிக அளவில் செலவிடுவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. இதுகுறித்து பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
திரும்ப பெறப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள், செல்லாதவையாக அறிவிக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சக்திகாந்த தாஸ், "செப்டம்பர் 30 காலக்கெடுவுக்குப் பிறகு இந்த நோட்டுகளின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்வேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை" என்றார்.