இந்தியாவுக்கு எதிராக வாட்சப் குரூப் நடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆண்ட்டி இண்டியன் வாட்ஸப் குரூப்:


பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரிஃப் பகுதியில் வசித்து வருபவர் மர்குவ் அகமது டேனிஷ். 26 வயதான இவர் கஸ்வா-இ-ஹிந்த் என்ற பெயரில் வாட்சப் குரூப் ஒன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த குரூப்பில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்துவந்துள்ளார். இந்த வாட்சப் குரூப்பில் வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் இயங்கும் தெஹ்ரிக்-இ-லப்பைக் என்ற அடிப்படைவாதக் குழுவுடன் அகமது டேனிஷ்ற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாட்னாவில் வைத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.




பாகிஸ்தான் அமைப்போடு தொடர்பு:


 விசாரணையில் தெஹ்ரிக்-இ-லப்பைக்  அமைப்புடன் தொடர்பு இருந்ததோடு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபைஸன் என்பவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. வாட்சப் குரூப்பை சோதனையிட்ட போது அதில் இந்திய தேசியக் கொடி மற்றும் சின்னத்தை அவமதித்து பதிவுகளை பகிர்ந்திருந்தது தெரியவந்தது. டேனிஷ் தான் அந்த குரூப்பின் அட்மின் என்பது, அவர் இன்னும் சில வெளிநாட்டு குரூப்புகளிலும் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் டேனிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞரை விசாரிப்பதற்காக காவல்துறையுடன் அமலாக்கத்துறையுடன் இணைந்து விசாரிக்கும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.




மிஷன் இண்டியா 2047:


அதே நேரத்தில் பாட்னா மற்றும் மோதிஹரி மாவட்டங்களிலுள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் குழுவான பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் கைது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த ரெய்டு நடைபெற்றுள்ளதாகவும், இருவரும் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி முகமது ஜலாலுதீன் மற்றும் ஏதர் பர்வேஸ் ஆகியோர் பீகாரின் புல்வாரி ஷரீஃப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 'India 2047- Towards rule of Islam in India' என்ற பெயரிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.




சிமி இயக்க முன்னாள் உறுப்பினர்:


முகமது ஜலாலுதீன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள ஏதர் பர்வேஸ் சிமி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்றும் பர்வேஸின் இளைய சகோதரர்  2001-2002 குண்டு வெடிப்பு தொடர்பாக சிறை சென்று வந்தவர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு காவல்துறை அதிகாரி ஆர்எஸ்எஸ் மற்றும் பிஎஃப்ஐ-ஐ ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.