ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணம் செய்து வைக்காத விரக்தியில் 19 வயது இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

மன அழுத்தம் காரணமாக தற்கொலை

இந்த சம்பவம் கடந்த நவம்பர் 30ம் தேதி டோம்பிவ்லி பகுதியில் நடந்ததாக  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அவர் திருமணம் செய்ய விருப்பப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் இப்போது திருமணம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அந்த இளைஞர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டைச் சேர்ந்த அந்த நபர், தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். ஆனால் காதலன், காதலி இருவருக்கும் 19 வயது தான் ஆகியுள்ளது. எனினும் அந்த நபர் தன்னுடைய வீட்டில் திருமணம் செய்ய விரும்பி காதலிக்கும் விஷயத்தைக் கூறியுள்ளார். அவரின் பெற்றோர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Continues below advertisement

காத்திருக்க சொன்ன பெற்றோர்

மாறாக, திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 21 வயதை அடையும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதுவரை எல்லாம் தங்களால் காத்திருக்க முடியாது என அந்த இளைஞர் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினருடன் அந்த இளைஞருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்தும் கடும் மன அழுத்தத்தில் இருந்த நபர் தனது வீட்டின் அறையில் சேலையைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக மன்பாடா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு அந்த இளைஞரின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்தவரின் உடலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இளம் வயதில் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பது துரதிஷ்டவசமானது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)