DOT Telecom: மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் அனைத்து போன்களிலும் சஞ்சார் சாதி செயலியை கட்டாயமாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

மத்திய அரசு உத்தரவு:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது உள்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இனி, சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சஞ்சார் சாதி செயலி கட்டாயம்:

கடந்த 28ம் தேதி வெளியிட்டப்பட்டுள்ள உத்தரவில், “ புதிய போனை வாங்கிய பிறகு பயன்படுத்துவதற்கு ஏதுவாக அதனை தயார்படுத்தும்போதே, செயலியானது வெளிப்படையாக தெரியும் வகையிலும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். செயலியை மறைக்கவோ, செயலிழக்க செய்யவோ அல்லது செயலியின் அம்சங்களை கட்டுப்படுத்தவோ உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை.  நிறுவனங்கள் உத்தரவை செயல்படுத்த 90 நாட்களும், இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய 120 நாட்களும் அவகாசம் உள்ள” என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே கடைகளில் உள்ள சாதனங்களுக்கு, சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் பயன்பாட்டை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

சஞ்சார் சாதி செயலியின் பயன் என்ன?

சஞ்சார் சாதி என்பது சைபர் மோசடியை எதிர்த்துப் போராடவும் தொலைத்தொடர்பு பாதுகாப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட, குடிமக்களை மையமாகக் கொண்ட செயலியாகும். இதன்மூலம்,

  • ஒரு மொபைல் போன் உண்மையானதா என்பதை அதன் IMEI எண்ணைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்
  • சந்தேகிக்கப்படும் மோசடி அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்கலாம்
  • தொலைந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை பற்றி புகாரளிக்கலாம்
  • பயனர்களின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து மொபைல் இணைப்புகளையும் அறியலாம்
  • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பகமான தொடர்பு விவரங்களை அணுகலாம்

ஏன் இந்த செயலி அவசியம்:

ஒரு நேரத்தில் பல சாதனங்களில் ஒரே சாதனம் தோன்றும் சந்தர்ப்பங்கள் உட்பட, போலி IMEI-கள் கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று தொலைதொடர்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் பெரிய செகண்ட் ஹேண்ட் மொபைல் சந்தையில், திருடப்பட்ட அல்லது ப்லாக் லிஸ்டில் சேர்க்கப்பட்ட கைபேசிகள் மறுவிற்பனை செய்யப்படுவதும், தற்செயலாக வாங்குபவர்களை குற்றச் செயல்களில் தொடர்புபடுத்துவது ஆகியவை அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தொலைபேசி வாங்குவதற்கு முன், அதன் IMEI தடுக்கப்பட்டுள்ளதா அல்லது கருப்புப் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க Sanchar Saathi பயனர்களுக்கு உதவுகிறது. மொபைல் போன்களின் 15 இலக்க IMEI எண் உட்பட தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை சேதப்படுத்துவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகும், மேலும் தொலைத்தொடர்புச் சட்டம் 2023 இன் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, ஒப்போ மற்றும் சியோமி உள்ளிட்ட அனைத்து முக்கிய மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும், அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே இந்தியாவில் தங்கள் சாதனங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:

சஞ்சார் சாதி செயலியை அனைத்து போன்களிலும் காட்டாயப்படுத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த உத்தரவால் குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் இன்றியமையாத பகுதியான தனியுரிமைகள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.  முன்கூட்டியே ஏற்றப்பட்ட, நீக்க முடியாத அரசாங்க செயலி, ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்க ஒரு டிஸ்டோபியன் கருவியாகும். இது ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வொரு அசைவு, தொடர்பு மற்றும் முடிவைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையாகும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.