தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரியில் மாநிலங்களில் பாஜக பெரிய வளர்ச்சியை அடையாத சூழலில் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தியவர் பி.எஸ்.எடியூரப்பா. கர்நாடக அரசின் சமூகநலத்துறையில் கடைநிலை எழுத்தராக வாழ்க்கையை தொடங்கிய எடியூரப்பாவால் கர்நாடக முதலமைச்சர் பதவியில் ஒரு முறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியாத சூழலிலேயே அவரின் ஆட்சி அதிகார பயணம் முடிவுக்கு வந்துள்ளது. பி.எஸ்.எடியூரப்பா இதுவரை கடந்து வந்த அரசியல் பயணங்கள் அனைத்தும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே உள்ளது. 



பூக்கனக்கேரே சித்தலிங்கப்பா எடியூரப்பா என்ற இயற்பெயர் கொண்ட பி.எஸ்.எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தவர். தனது 4 வயதில் தாயை இழந்த எடியூரப்பாவின் தந்தை தந்தை சித்தலிங்கப்பா கர்நாடகாவில் செல்வாக்கு பெற்ற சமூகமாக விளங்கும் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த விவசாயி ஆவார். தனது கல்லூரி காலத்திலேயே பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருக்கம் காட்டி வந்த எடியூரப்பா, 1965ஆம் ஆண்டு கர்நாடக அரசின் சமூகநலத்துறையில் ஐந்தாம் நிலை எழுத்தராக பணியில் சேர்ந்தார். பின்னர் அப்பணியை ராஜினாமா செய்த எடியூரப்பா, ஷிக்கரிபுராவில் வீரபத்ர சாஸ்திரி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் எழுத்தராக பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது முதலாளியான வீரபத்ர சாஸ்திரியின் மகளான மித்ராதேவியை மணந்து கொண்ட எடியூரப்பா ஷிவ்மோகா நகருக்கு இடம்பெயர்ந்து சொந்தமாக ஹார்டுவேர் கடையை தொடங்கினார். 



1970ஆம் ஆண்டு ஷிக்கரிபுரா பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயலாளராக பணியாற்றிய எடியூரப்பா, 1977இல் அவசர நிலைக்காலத்தின்போது 45 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் அமைப்பான ஜனசங்கத்தில் தலைவராக இருந்த எடியூரப்பா. பின்னர் ஜனசங்கம், பாரதிய ஜனதா என பெயர் மாற்றப்பட்டு 1983ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்.எல்.ஏ.,வாக கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்வானார். 1988ஆம் ஆண்டு கர்நாடக மாநில பாஜக தலைவரான அவர் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வந்தார்.



2006 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதளம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. 20 மாதங்கள் மதசார்பற்ற ஜனதளம் கட்சியின் ஹெச்.டி.குமாரசாமி முதல்வராகவும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா முதல்வராகவும் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஹெச்.டி.குமாரசாமி மறுத்ததால், குமராசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார் எடியூரப்பா. பின்னர் எடியூரப்பாவிற்கு ஆதரவளிப்பதாக ஹெச்.டி.குமாரசாமி அறிவித்ததால், 2007 நவம்பர் 12ஆம் தேதி கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். எனினும் அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை எனக்கூறி எடியூரப்பாவிற்கு அளித்த ஆதரவை குமாரசாமி விளக்கி கொண்டதால் பதவியேற்ற 7 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 


2008ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கர்நாடகாவில் முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்த நிலையில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். சட்டவிரோத கனிமவள சுரண்டல், சட்டவிரோத நிலப்பரிமாற்றம், சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி உள்ளிட்ட விவகாரங்களில் எழுந்த குற்றச்சாட்டு காரணமாக 2011ஆம் ஆண்டில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பாவை கைது செய்ய லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 நாட்கள் சிறையில் இருந்த எடியூரப்பா 2012ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சியை தொடங்கினார். 



2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எடியூரப்பாவின் கட்சி பாஜக போட்டியிட்ட பல்வேறு தொகுதிகளில் வாக்குகளை பிரித்ததுடன் கட்சி மொத்தமுள்ள 203 இடங்களில் 8 இடங்களை வென்று 10 சதவீத வாக்குகளை பெற்றது. இதனால் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்தது. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக தேசிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்த எடியூரப்பா தேர்தல் வெற்றிக்கு பிறகு தனது கர்நாடகா ஜனதா பக்‌ஷா கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.


2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக சந்தித்தது. இத்தேர்தலில் எந்த கட்சிக்கு அரிதிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளக்கிய பாஜகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததன் பெயரில் எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்றார். இருப்பினும் அவரால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பதவியேற்ற இரண்டாவது நாளில் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் இந்தியாவிலேயே குறைந்த நாட்கள் பதவியில் இருந்த முதல்வர் என்ற பெயரை பெற்றார். 



இருப்பினும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், 26ஆம் தேதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதல்வராக பொறுப்பேற்ற அதே ஜூலை 26ஆம் தேதியிலேயே அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


கடந்த சில நாட்களாக தனது சொந்த சமூகமான லிங்காயத்து சமூகத்தின் பல்வேறு தலைவர்களும், லிங்காயத்து அமைப்பின் மடாதிபதிகளும் எடியூரப்பாவை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 



சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எடியூரப்பாவுடன் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சோபா கரன்லெஜே மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ராஜினாமா செய்த எடியூரப்பாவிற்கு பாஜக மேலிடத் தலைமை ஆளுநர் பொறுப்பு தரலாம் எனவும் அவரது மகன்களுக்கு கர்நாடக அரசிலும், கட்சியிலும் முக்கியப்பதவிகளை தரலாம் எனவும் கூறப்படுகிறது.