Year Ender 2024: நடப்பாண்டில் ஒவ்வொரு மாதமும் தேசிய அளவில் பேசுபொருளான, முக்கிய நிகழ்வுகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


முடிவை நெருங்கும் 2024:


சில நொடிகளுக்கு முன்பே தொடங்கியது போன்று இருந்த, 2024ம் ஆண்டு இன்னும் 3 தினங்களில் மொத்தமாக முடிவடைய உள்ளது. ரோலர் கோஸ்டரை போன்று ஏற்ற, இறக்கங்களுடன் அதிவேகமாகவே இந்த ஆண்டு நம்மை விட்டுச் செல்லவதாக உணர முடிகிறது. நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், ஏதேனும் ஒரு சம்பவம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒவ்வொரு மாதத்திலும் பெரும் பேசு பொருளாக அமைந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



2024ம் ஆண்டை இந்தியா கடந்து வந்தது எப்படி? 


1. ஜனவரி - 22: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில், குழந்தை ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படு வரும் கோயிலை, கட்டி முடிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தேசிய அளவில் கவனம் ஈர்த்த இந்த நிகழ்வினை ஒட்டி, பாஜக ஆண்ட பல மாநிலங்களில் அரசு பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டது.


2. பிப்ரவரி -15: அரசியல் கட்சிகள் நிதி பெறும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவகாரங்களை, எஸ்பிஐ வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.


3. மார்ச் - 21: மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த 5 நாட்களுக்குப் பிறகு, மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டர். 


4. ஏப்ரல் - 19: மக்களவை தேர்தலின் முதல்கட்ட தேர்தல் தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையின் போது பேசிய மோடி, “என் அம்மா உயிருடன் இருந்தபோது, ​​​​நான் உயிரியல் ரீதியாக பிறந்தேன் என்று நம்பினேன். அவர் இறந்த பிறகு, என்னுடைய எல்லா அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தபோது, ​​கடவுள் என்னை அனுப்பினார் என்று நான் உறுதியாக நம்பினேன். இந்த ஆற்றல் என் பயாலாஜிகல் உடலில் இருந்து வர முடியாது. ஆனால் கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது” என நம்புவதாக தெரிவித்தார்.


5. மே - 31: பாஜக கூட்டணியில் உள்ள ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியை சேர்ந்த மக்களவை தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.


6. ஜூன் - 4: 2024 பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதனடிப்படையில், பாஜகவைச் சேர்ந்த நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். 


7. ஜூலை - 30: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 231 பேர் கொல்லப்பட்டனர், 397 பேர் காயமடைந்தனர் மற்றும் 118 பேர் காணாமல் போயினர். ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தனர்.


8. ஆகஸ்ட் - 9: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு தழுவிய எதிர்ப்புகளையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.


9. செப்டம்பர் - 19: ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலில் வழங்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி மற்றும் பிற விலங்குகளின் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.


10. அக்டோபர் - 9: இந்திய தொழில்துறையின் அடையாளமாக திகழ்ந்த ரத்தன் டாடா காலமானார். 


11. நவம்பர் - 20: மகாராஷ்டிர சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம், தேவேந்திர ஃபட்னாவிஸ் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சரானார்.


12. டிசம்பர் - 13: புஷ்பா 2 திரைப்படத்தை காண நடிகர் அல்லு அர்ஜூன் சென்ற திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் பலியானார். இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு மறுநாள் ஜாமினில் வெளியே வந்தார். இந்த படத்தில் அவர் செம்மர கடத்தல் கும்பலின் தலைவராக அல்லு அர்ஜுன் நடித்து இருந்தார்.