மத்தியப் பிரதேசத்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாத காரணத்தால் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் மறைந்து கொண்டு 250 கிமீ தூரத்திற்கு இளைஞர் ஒருவர் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழ்மை காரணமாக ஆபத்தான நிலையில் அவர் பயணம் செய்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜபல்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இளைஞர் ஒருவர் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் மறைந்து ஒளிந்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். அவரிடம் விசாரித்ததில், இடார்சி நகரில் இருந்து அந்த இளைஞர் இதேபோன்று 250 கிமீ பயணித்து வந்தது தெரிய வந்தது.
ஆபத்தான முறையில் ரயில் பயணம் செய்த இளைஞர்:
இதுகுறித்து அதிகாரிகள் விரிவாக பேசுகையில், "புனே-டானாபூர் விரைவு ரயிலின் (ரயில் எண் 12149) ஏசி-4 பெட்டியின் கீழ் வழக்கத்திற்கு மாறான அசைவைக் கண்டு, ரயில்வே ஊழியர்கள், லோகோ பைலட்டிடம் ரயிலை நிறுத்தச் சொன்னார்கள்.
சக்கரங்களுக்கு இடையே உள்ள பகுதியில் மறைந்திருந்த அந்த நபரை வெளியே வரும்படி கேட்டு, ரயில்வே பாதுகாப்புப் படையிடம் (ஆர்பிஎஃப்) ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையின் போது, அந்த நபர் தன்னால் ரயில் டிக்கெட் வாங்க முடியவில்லை என தெரிவித்தார்.
அதிகாரிகள் அதிர்ச்சி:
அதனால் ஜபல்பூருருக்கு செல்ல இம்மாதிரியாக பயணம் செய்ததாக கூறினார். எவ்வாறாயினும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்பது அவரது பதில்கள் மூலம் தெரிய வருகிறது.
ஜபல்பூரில் உள்ள ரயில்வே காவல்துறை, அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள மேலும் விசாரித்து வருகின்றனர். அத்தகைய ஆபத்தான பயணத்தை அவர் ஏன் மேற்கொண்டார் என்பதை அறியவும் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது" என தெரிவித்தது.
இதையும் படிக்க: Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!