யமுனை நதியின் நீர்மட்டம் 208.46 மீட்டரைத் தாண்டியதால், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.


வரலாறு காணாத வகையில் உயர்ந்த யமுனை நதி


டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இன்று காலை நீர்மட்டம் 208.46 மீட்டராக பதிவானதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு பின் இந்த நிலையை யமுனை நதி எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பு யமுனை நீர்மட்டம் 207.49 மீட்டரைத் தாண்டியபோது இதுபோன்ற வெள்ளம் ஏற்பட்டது. 1978ஆம் ஆண்டில்  நீர்மட்டம் 207.49 மீட்டராக பதிவாகி இருந்தது குறப்பிடத்தக்கது.







கெஜ்ரிவால் ட்வீட்


"யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது 208.46 மீட்டரை எட்டியுள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றியுள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சாலைகளில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: IND vs WI Test: அஸ்வின், ஜடேஜா சுழலில் மாயம்.. 150 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா அபாரம்..!


மக்கள் ஒத்துழைக்க வேண்டும்


"தண்ணீரில் மூழ்கிய பகுதிகளில் இருந்து மக்களை நிர்வாகம் வெளியேற்றுகிறது. அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உயிர்களைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும். டெல்லியில் வசிப்பவர்கள் அனைவரும் இந்த அவசர நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.






மக்கள் மற்றும் கால்நடைகள் மீட்பு


புதன்கிழமை இரவு ஆற்று நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் ரிங்ரோடு (மஜ்னு கா திலா முதல் ராஜ்காட் வரை) மூடப்பட்டது. 1,006 பேர் மற்றும் 999 கால்நடைகளை வெளியேற்றியதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. "பிஎஸ் நியூ உஸ்மான்பூர் பகுதியில் நாங்கள் 260 பேரையும், 185 கால்நடைகளையும், பிஎஸ் சாஸ்திரி பூங்காவில் 266 பேரையும், 262 கால்நடைகளையும் மீட்டுள்ளோம். சோனியா விஹாரில் 480 நபர்களையும் 230 கால்நடைகளையும் மீட்டுள்ளோம். மொத்தம் 1006 நபர்களையும் 999 கால்நடைகளையும் மீட்டுள்ளோம்" என்று போலீஸார் தெரிவித்தனர். மொத்தமாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்ட 16,000 பேரை இதுவரை வெளியேற்றியுள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.