சந்திரயான் - 2 விண்கலத்தின் தோல்வியில் இருந்து கிடைக்கப்பெற்ற படிப்பினையை கொண்டு, சந்திரயான் - 3 விண்கலத்தை இஸ்ரோ எப்படி மேம்படுத்தியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


சந்திரயான் -2:


உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான் - 2 விண்கலம், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆர்பிட்டர் கருவி திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டாலும், யாருமே எதிர்பாராத விதமாக லேண்டர் கருவி தோல்வியை சந்தித்தது. இது பெரும் பின்னடைவாக கருதப்பட்டாலும் அதனால் துவண்டுவிடாத, இந்திய ஆராய்ச்சியாளர்கள் தோல்வி கற்றுக்கொடுத்த படிப்பினையை கொண்டு சந்திரயான் - 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளனர். இந்த முறை நிலவை எட்டிப்பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், புதிய விண்கலத்தில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.   


லேண்டர் கருவியின் உறுதித்தன்மை:


 லேண்டர் கருவியான விக்ரமில் எந்தவித பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அது மிகவும் வலிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், மிகவும் உறுதியானதாகவும், அதிக தரையிறங்கும் வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் போது லேண்டரின் வேக சகிப்புத்தன்மை வினாடிக்கு 2 மீட்டரிலிருந்து வினாடிக்கு 3 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 3 மீட்டர் வேகத்தில் லேண்டர் கருவி தரையிறங்கினாலும், லேண்டரின் கால்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகப்படியான எரிபொருள்:


இரண்டாவதாக, பயணத்தின் போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக லேண்டர் கருவியான விக்ரமில் கூடுதல் எரிபொருள் வழங்கப்பட உள்ளது. தேவைப்பாட்டால் பின்னோக்கி வரவும் இதன் மூலம் சாத்தியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புதிய சென்சார்:


laser doppler velocity metre எனப்படும் புதிய சென்சார் கருவியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.  இதில் இருந்து வெளிப்படும் லேசர் ஒலி மூலம், மூன்று வேக திசையான்களின் (Three velocity Vectors) தகவல்களை பெற முடியும். 


மென்பொருள் மேம்பாடு:


இன்ஜின் பிரச்னை, உந்துதல் இடையூறு, சென்சார் செயலிழப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.  புதிய லேண்டர் கருவியின் எடை 200 கிலோ அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் லேண்டிங்கின் போது குறைந்தது 2 இன்ஜின்கள் செயல்படுவது அவசியம். அதன் காரணமாகவே எடையை குறைக்கும் நோக்கில், சந்திரயான் - 2 விண்கலத்தில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட மத்திய இன்ஜின் தற்போது அகற்றப்பட்டுள்ளது.  


கூடுதல் சோலார் பேனல்கள்:


லேண்டர் கருவியின் மேல்புறத்தில் சோலர் பேனல்களுக்கான இடம் அதிகரிக்கப்படுள்ளது. கூடுதல் ஆற்றலை உருவாக்கும் நோக்கில் இந்த வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூரியனை நேரடியாக எதிர்கொள்ளும் பகுதி அல்லாத இடத்தில் லேண்டர் கருவி, தரையிறங்கினாலும் ஆற்றலை உருவாக்கும் வகையில் லேண்டர் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, கண்காணிப்பு, டெலிமெட்ரி மற்றும் கட்டளை அம்சங்களுக்கான ஏண்டனாக்களும் இணைக்கப்பட்டுள்ளன.


பரிசோதனைகள்:


சந்திரயான் - 2க்கு செய்யப்பட்டதை காட்டிலும் கூடுதலான சோதனைகளுக்கு சந்திரயான் - 3 உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல், சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.  தன்னாட்சி விமானங்கள், ஹெலிகாப்டர் விமானங்கள், கிரேன்-மோட் தரையிறங்கும் சோதனைகள், டிராப் சோதனைகள், சாப்ட்வேர் சோதனைகள் ஆகியவற்றின் மூலம்,  சாத்தியமான தோல்விகள் மற்றும் மீட்பது ஆகியவை தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது. தோல்விகளுக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு, அதற்கான தீர்வுகளுடன் சந்திரயான் - 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த முறை நிச்சயம் நிலவை எட்டுவோம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.