மீட்பு பணிகளை விரைந்து முன்னெடுக்கவில்லை என, ஹரியானாவில் எம்.எல்.ஏவை பெண் ஒருவர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


தொடரும் கனமழை:


வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாய் மாறி காட்சியளிக்கின்றன. வீடுகளை இழந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஹரியானாவில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்திருந்த எம்.எல்.ஏவை பெண் ஒருவர் அதிகாரிகள் முன்பே அறைந்துள்ளார். 


நடந்தது என்ன?


ஹரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில், குஹ்லா பகுதியில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு பொதுவெளியிலும், முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜனநாயக் ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஈஷ்வர் சிங் ஆய்வு செய்ய வந்திருந்தார்.






எம்.எல்.ஏவை அறைந்த பெண்: 


அதிகாரிகள் உடன் சென்று நடத்திய ஆய்வின் போது, எம்.எல்.ஏ., பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மோசமான வடிகால் திட்டங்களால் தான் மழைநீர் முறையாக வடியாமல், பல இடங்களில் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எம்.எல்.ஏவை சூழ்ந்து முற்றுகையிட்ட மக்கள், இவ்வளவு நாட்கள் இன்றி இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர். அந்த நேரம், யாரும் எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென ஆவேசமடைந்து, எம்.எல்.ஏவை அறைந்தார். அதோடு, இப்போது மட்டும் ஏன் நீ வந்தாய் எனவும் எம்.எல்.ஏவை பார்த்து அந்த பெண் ஆவேசமாய் கேட்டார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அங்கிருந்த அதிகாரிகள், அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 


”மன்னித்து விட்டேன்”


சம்பவம் தொடர்பாக பேசிய எம்.எல்.ஏ., ஈஷ்வர் சிங் “என்னை அடித்த பெண்ணை நான் மன்னித்துவிட்டேன். அவருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டேன்” என விளக்கமளித்தார்.


10 பேர் பலி:


ஹரியானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை காரணமாக பலியானவர்களின் குடும்ப்பத்தினருக்கு அரசு தரப்பில் தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது.