பீகார் மாநிலத்தின் சுபவுல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பிராமணர்கள் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. அவர் சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்டில் பிராமிணர்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என்றார்.


மேலும், பிராமணர்கள் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் பிராமணர்களை அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கே அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.


அவர்கள் இங்கேயே செட்டிலாகி விட்டனர் என்றும் பிராமணர்கள் நம்மை பிரித்து ஆட்சி செய்ய முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். நாம் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும், என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் கருத்துக்கள் பேசு பொருளாகியுள்ளது.  


ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் உள்ள ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் குமார் ஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள்  விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன என்றார். இது போன்ற கருத்துக்களுக்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவை  மஹாகத்பந்தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.


முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பாஜக மண்டல தலைவர் பிரீதம் சிங் லோதி என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ”பிராமணர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். அவர்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். மக்களின் பணத்தில் சொத்துகளை வாங்கிக் குவிக்கின்றனர்” என்றார்.


இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இந்த நிலையில் பிராமணர்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்தாக, பாஜக இளைஞரணி தலைவர் பிரவீன் மிஸ்ரா என்பவர், பிரிதம் சிங் லோதி மீது போலீசில் புகார் கொடுத்தார். இவ்விவகாரம் குறித்து பிரீதம் சிங் லோதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிலையில் பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிராமணர்கள் குறித்து பேசிய பிரீதம் சிங் லோதி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவின் முன்னாள் முதல்வர் உமாபாரதியின் நெருங்கிய உதவியாளராக இருக்கும் பிரீதம் சிங் லோதி, கடந்த 2013 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் பிச்சோர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.