மல்யுத்த சம்மேளன சங்க தலைவர் (The Wrestling Federation of India (WFI)) தேர்தல் வரும் ஜூலை-4 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (Indian Olympic Association) அறிவித்துள்ளது.


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க. எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு வீராங்கனைகள் அமித் ஷா-வை சந்தித்தனர். 


மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்; பின்னணி என்ன?


கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறினர். இதனையடுத்து குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.


விசாரணையின் அடிப்படையில் அவர்கள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அந்த அறிக்கையின் விவரத்தையும் கூறவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஏப்ரல் 23 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது அவர்கள் டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷண் சிங் மீது புதிதாக புகார் கொடுத்தனர். ஒரு சிறுமி உள்பட மூன்று வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர்.


அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் எஃப்ஐஆர் பதிவு செய்ய வலியுறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பிரிஜ் பூஷண் மீது போக்ஸோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகளிடம் டெல்லி காவல்துறை ஆதாரம் கேட்டுள்ளது. தங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஏதேனும் இருந்தால் அதை சமர்பிக்குமாறு டெல்லி காவல்துறை கேட்டு கொண்டதாக தகவல் வெளியானது. 


மல்யுத்த சம்மேளன சங்க தலைவர் தேர்தல்


இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” மல்யுத்த சம்மேளன சங்கத்தின் செயற்குழுவிற்கு தேர்தல் நடத்தவும்,தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் மிட்டல் குமார் என்பவரை நியமித்திருப்பதாகவும், உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்கலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு பெண் ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.