தேர்தலை நடத்துவதில் தொடர் சிக்கல்:


நாளை நடைபெறவிருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த தேர்தல் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், குவஹாத்தி உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்தது.


இதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிக்கு (நாளை) தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.


மல்யுத்த வீராங்கனைகளின் முக்கிய கோரிக்கை:


பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தற்போதை தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நடத்திய போராட்டம் விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் மத்திய அரசு மல்யுத்த வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 5 முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைத்தனர். அதில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்த வேண்டும், கூட்டமைப்புக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் போன்றவை மல்யுத்த வீரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.


கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரிஜ் பூஷன் சிங்கின் 18 ஆதரவாளர்கள், கூட்டமைப்பின் பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால், கூட்டமைப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள பிரிஜ் பூஷன் சிங் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கூட்டமைப்பை தனது கட்டிப்பாட்டில் வைத்து கொள்ள முயற்சிக்கிறாரா பிரிஜ் பூஷன் சிங்?


தனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். ஆனால், தனது குழுவிற்கு சுமார் 25 மாநில சங்கங்களின் ஆதரவு இருப்பதாக பிரிஜ் பூஷன் தெரிவித்திருந்தார். அதேபோல, பிரிஜ்பூஷன் சிங்கால் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. ஏன் என்றால், அதிகபட்சமாக ஒரு நபரால் 12 ஆண்டுகளுக்கு மட்டுமே தலைவர் பதவியில் இருக்க முடியும். அவர், ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு தலைவராக பதவி வகித்திருப்பாதால், தேசிய விளையாட்டு விதிகளின்படி, அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.


பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் வைத்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், கடந்த ஜூலை 20ஆம்  தேதி, பிரிஜ் பூஷன் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.