வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு சமூகத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சு, சமூகத்தின் அமைதியை கெடுத்து பெரும் அழிவை உண்டாக்குகிறது. இம்மாதியான வெறுப்பு பேச்சை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு:
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை தூண்டும் விதமான பேச்சை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது? என்ற கேள்வி எழுப்பியிருந்தது.
அதேபோல, ஹரியானா மதக்கலவரத்திற்கு காரணமாகக் கூறப்படும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில், "பேரணிகளின் போது வெறுப்பூட்டும் பேச்சுகளோ வன்முறைகளோ நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு" மாநில அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றம் அதிரடி:
இந்த நிலையில், அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்களை தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் ஷாஹீன் அப்துல்லா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "ஹரியானா உள்பட நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட பேரணிகளின்போது, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை கொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தது, அவர்களை சமூக ரீதியாக புறக்கணிப்பது, பொருளாதார ரீதியாக ஒடுக்க வேண்டும் என சொல்வது போன்றவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டது.
ஏற்க முடியாது:
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என் பட்டி ஆகியோர்கள் கொண்ட அமர்வு, "சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கம் இருக்க வேண்டும். அனைத்து சமூகங்களும் பொறுப்பேற்க வேண்டும். வெறுப்பு பேச்சு நல்லதல்ல. அதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்தது.
நாடு முழுவதும் பதிவாகும் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், "பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு வரும் வெறுப்புப் பேச்சு புகார்களை விசாரிக்கும் குழுவை அமைக்குமாறு காவல் துறைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தும்" என்றார். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.