பாலியல் தொல்லை:
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்இதையடுத்து, பஜ்ரங் புனியா, வினேஷ் போகர் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் ஜன.18ஆம் தேதி காலை இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை மிரட்டல்:
அப்போது பேசிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பல மல்யுத்த பெண்கள் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் நான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என்றும் வினேஷ் போகட் கூறினார். எனக்கு தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. பிரிஜ் பூஷன் சரண் சிங் நான்கு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர்கள் மீது புகார் வரும்போதெல்லாம், நேராக சென்றால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் இந்தப் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கடந்த சில நாள்களாக கவனமீர்த்து வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்ததை அடுத்து தங்கள் போராட்டத்தை வீரர்கள் கைவிட்டனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிரான இந்திய மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் வினோத் தோமரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சனிக்கிழமை இடைநீக்கம் செய்து அறிவித்தது.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை ஒரு மேற்பார்வைக் குழு விசாரிக்கும் வரை WFI தலைவர் நான்கு வாரங்களுக்கு ஒதுங்கி இருப்பார் என்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இதையடுத்து, பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க சங்கம் அமைத்துள்ள குழுவில் வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை குழு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் ஏற்பட்டுள்ள பாலியல் சர்ச்சையை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணையை மேற்பார்வையிட 5 பேர் கொண்ட குழு மத்திய அரசு அமைத்துள்ளது.
மேற்பார்வை குழுவின் தலைவராக மேரி கோம் இருப்பார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், தயான்சந்த் விருது பெற்ற திருப்தி முர்குண்டே, சாய் உறுப்பினர் ராதிகா ஸ்ரீமன், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் ராஜகோபாலன் (ஓய்வு) ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து வரும் ஒரு மாதத்திற்கு இந்தக் குழு விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை வீரர் மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே 4 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் கமிட்டி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.