ஏழை மக்களின் நலன்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டம் மூலம் சமூகத்திற்கு தங்களால் முடிந்தவற்றை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகிறது.
ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்தவற்றை செய்வது அனைவரின் சமூக கடமையாகும். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு மாலில் ஏழை மக்கள் இலவசமாக ஆடை மற்றும் அணிகலன்களை வாங்கி கொள்ளலாம்.
அனோகா மாலுக்கு செல்லும் ஏழை, எளிய மக்கள் ஆடை மற்றும் அணிகலன்களை இலவசமாக வாங்கி செல்கின்றனர். இந்த ஆடைகளை நலவிரும்பிகள் நன்கொடையாக வழங்குகின்றனர். ரிக்சா ஓட்டுபவர்கள், கூலி தொழிலாளிகள், குடிசைவாசிகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மழை காலத்தின் குளிரை சமாளிப்பதற்கு இந்த ஆடைகள் உதவும் வகையில் அமைந்துள்ளது.
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்த ஷாப்பிங் மால் திறக்கப்படும். இது ரஹீம் நகரில் அமைந்துள்ளது. நன்கொடையாளர்களிடம் இருந்து கம்பளி ஆடைகளை வாங்கி ஷாப்பிங் மாலில் அவை காட்சிப்படுத்தபடுகின்றன.
பிடித்தவர்கள், அதை இலவசமாக வாங்கி கொள்ளலாம். இந்த ஷாப்பிங் மால், கடந்த 5 ஆண்டுகளாக குளிருக்கு போடும் ஆடைகளை இலவசமாக விற்று வருகிறது.
இந்த ஷாப்பிங் மாலின் உரிமையாளர் டாக்டர் அகமது ரசா கான் (யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) ஆவார். இதுகுறித்து அவர் விவரிக்கையில், "பொதுவாக, இலவச ஆடைகளை ஏற்பவர்கள் தயக்கம் காட்டுவர். ஆனால், இங்கு அப்படி இல்லை. தேவைப்படுவோருக்கு மட்டுமே கம்பளி ஆடைகள் வழங்கப்படுகிறது.
அனோகா மாலை பொறுத்தவரையில், கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்பவர், ஒரு ஷாப்பிங் மாலில் நுழைவது போல் எளிதாக உள்ளே நுழைந்து, துணிகளைப் பார்த்து, தங்கள் விருப்பப்படி எடுத்துச் செல்லலாம். நன்கொடையாளர்கள் மற்றும் ஆடைகளை எடுத்து வருபவர்கள் பற்றிய முறையான பதிவு பராமரிக்கப்படுகிறது.
தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வணிக வளாகத்தை யாரும் தேவையற்ற அனுகூலங்களைப் பெற முனையக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் சிலர் இங்கிருந்து துணிகளை எடுத்து வந்து சந்தையில் விற்பனை செய்தனர். ஏழைகளுக்கு ஆடைகள் மட்டுமின்றி செருப்புகள், சூட்கேஸ்கள், பள்ளி சீருடைகள், போர்வைகள் ஆகியவையும் மாலில் வைக்கப்பட்டுள்ளன.
நன்கொடையாளர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள். உடைகள் மற்றும் பிற பொருட்கள் சுத்தமாகவும், அணிவதற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்கிறோம்.
இந்த வணிக வளாகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நான்கு பேர் கொண்ட ஊழியர்களால் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சுமார் 3,000 முதல் 4,000 பேர் மாலில் இருந்து துணிகளை எடுத்துள்ளனர். ஆடைகளை எடுப்பவர்களில் பெரும்பாலானோர் ரிக்ஷாக்காரர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடிசைவாசிகள்" என்றார்.