பாலியல் சீண்டல் தொடர்பாக டெல்லியல் நியாயம் கேட்டு போராடிய மல்யுத்த வீரர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.


பேரணியாக சென்ற வீரர் & வீராங்கனைகள்:


தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும்,  பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பேரணியாக சென்றனர். 


வீரர்களை அப்புறப்படுத்திய போலீசார்:


அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, வீரர் மற்றும் வீராங்கனைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.






பிரச்னை என்ன?


சர்வதேச மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம், மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மல்யுத்த வீரர்களுக்கு குவியும் ஆதரவு:


இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதி கிடைக்கும் வரை, போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என கூறி, டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடரும் போராட்டம்:


டெல்லி ஜந்தர் மந்தரில் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் தனது ஆதரவை தெரிவித்தார். இதனிடையே,  பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், பிரதமர் மோடி அமைதி காத்து வரும் நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மல்யுத்த வீரர்கள் முற்றுகையிட முயன்றனர்.