சமீப காலமாகவே, சைபர் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்களை மோசடி கும்பல் பல்வேறு விதமாக ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது. பணத்தை தருவதாகவும் இலவச பொருள்களை தருவதாகவும் கூறி மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க சைபர் பிரிவு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், அது குறைந்தபாடில்லை.
ஒரு பிளேட் சாப்பாட்டுக்காக ஒரு லட்சம் ரூபாயை ஏமாந்த பெண்:
இந்நிலையில், தென்மேற்கு டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பிளேட் உணவை வாங்கினால், மற்றொரு பிளேட் உணவை இலவசமாக தருகிறோம் எனக் கூறி 40 வயது பெண்ணிடம் 90,000 ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. ஒரு பிளேட் உணவை இலவசமாக பெற வேண்டுமானால், செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அந்த பெண்ணிடம் மோசடி கும்பல் கூறியுள்ளது.
அதை கேட்டு, அந்த பெண்ணும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். ஏமாற்றப்பட்ட அந்த பெண்ணின் பெயர் சவிதா சர்மா. வங்கியில் மூத்த அதிகாரியாக பணிபுரிகிறார். இதுகுறித்து அவர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், "இந்த சலுகை குறித்து எனது உறவினர் ஒருவர் பேஸ்புக்கில் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு, நவம்பர் 27ஆம் தேதி, அந்த தளத்தைப் பார்வையிட்டேன். மேலும், சலுகை தொடர்பாக விசாரிக்க கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அழைத்தேன். எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால், மீண்டும் ஒரு அழைப்பைப் பெற்றேன்.
நடந்தது என்ன?
பிரபலமான உணவகமான சாகர் ரத்னாவிடம் ஆஃபரை பெற சொல்லி அவர் சொன்னார். அழைப்பாளர், லிங் ஒன்றை பகிர்ந்து, சலுகையைப் பெற செயலியை பதிவிறக்கும்படி என்னிடம் கூறினார். செயலியை அணுகுவதற்கான பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லையும் அவர் அனுப்பினார். நான் சலுகையைப் பெற விரும்பினால், முதலில் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.
நான் லிங்கை கிளிக் செய்தேன். செயலி பதிவிறக்கப்பட்டது. பின்னர், நான் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டேன். நான் அதைச் செய்த தருணத்தில், எனது தொலைபேசியின் கட்டுப்பாட்டை இழந்தேன். அது ஹேக் செய்யப்பட்டு, எனது கணக்கில் இருந்து ₹ 40,000 டெபிட் செய்யப்பட்டதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது.
சில வினாடிகளுக்குப் பிறகு அவர் கணக்கில் இருந்து மேலும் 50,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக இன்னொரு குறுஞ்செய்தி வந்தது. எனது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எனது Paytm கணக்கிற்குச் சென்று, பின்னர் மோசடி செய்பவரின் கணக்கிற்கு மாறியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த விவரங்கள் எதையும் நான் அழைப்பாளருடன் பகிர்ந்து கொள்ளவில்லை" என்றார்.
இதுகுறித்து சைபர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற மோசடி வழக்குகள் பிற நகரங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தை இழந்துள்ளனர்.