ஆவதும் நீராலே... அழிவதும் நீராலே... இன்று உலக தண்ணீர் தினம்

நாம் உயிர்வாழ உதவும் காரணிகளில் முக்கியமானதான நீரின் பெருமையை போற்றும் விதமாக இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

Continues below advertisement

பஞ்ச பூதங்களால் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றில் முக்கியமானது நீர். ‛நீரின்றி அமையாது உலகு’ என்கிற வார்த்தையின் மகிமையை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இலவச அரிசி கிடைக்கும் இதே நாட்டில் தான் ஒரு லிட்டர் குடிநீரை 20 ரூபாய்க்கு வாங்கி பருகுகிறோம். நீரின் தேவை உலகளாவிய அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்களாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களாகவும் மாறி வருவதால் நீர் ஆதாரம் சுருங்கி வருகிறது. நிலத்தடி நீர் வற்றிப் போனதால் கடல் நீரை குடிநீராக்கிக் கொண்டிருக்கிறோம். அப்படியும் தேவை குறைந்தபாடில்லை.

Continues below advertisement


மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்றவாறு நீரின் தேவையும் அதிகரிக்கிறது, தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நீரின் தேவை அதிகரிக்கிறது. ஆனால் அதற்கேற்ப நீர் உற்பத்தி இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் நீர் உருவாகும் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள், தாவரங்கள் என பலதரப்பட்டோரின் நீர் தேவை உயர்ந்து கொண்டிருக்க காடுகள் அழிப்பு, மரங்கள் அழிப்பு என நீர் அழிப்பு நடவடிக்கைகள் ஏதாவது ஒரு வகையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. புவி வெப்பமயமாவதால் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் பருவ மழையை பாதிக்கிறது.

 


அதையும் மீறி பருவ மழை கொட்டித்தீர்க்கும் போது, அதை சேமிக்கும் திறனும் நம்மிடத்தில் இல்லை. இப்படி நீரை ஏதாவது ஒரு வகையில் நாம் வீணடிக்கிறோம். இது நாளைய தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம். இந்த உலகம் செல்வத்திற்காக, நிலத்திற்காக, பகைக்காக ஏன்... பெண்களுக்காக கூட போர்களை சந்தித்திருக்கிறது. நாளடைவில் நீருக்காக போர் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் அறிவியலாளர்கள். நீர் நம்மை வாழ வைக்கிறது; சில சமயம் அதே நீர் வெள்ளமாக, பேரலையாக நம் உயிரை பறிக்கிறது. ஆனாலும் நீரின்றி நாமில்லை. நாமின்றி நீர் இல்லை என்பதை உணர்ந்து நீரின் முக்கியத்துவம் புரிந்து நீரை சேமிப்போம், வீணடிப்பதை தவிர்ப்போம் இன்று உலக தண்ணீர் தினம். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola