மாணவர்கள் போராட்டம்...அசோகா பல்கலைக்கழக விவகாரம்! - என்ன நடந்தது?

ABP Tamil   |  21 Mar 2021 03:03 PM (IST)

“மேத்தாவை ராஜினாமா செய்யவிடாமல் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டது. இதன்மூலம் தனது கேள்வி கேட்கும் தகுதியையும் பல்கலைக்கழகம் இழந்துவிட்டது”

அசோகா பல்கலைக்கழகம்

’‘நான் அந்தப் பல்கலைக்கழகத்தின் அரசியல் இடையூறு என அதன் நிறுவனரே என்னிடம் சொன்னபிறகு எனக்கு இங்கு இனி வேலை இல்லை!”- பிரதாப் பானு மேத்தா

ஹரியானா மாநிலத்தின் தனியார் பல்கலைக்கழகமான அசோகா தற்போது சர்வதேச அளவில் அரசியல் தத்துவவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பல்கலைக்கழகப் பேராசிரியரும், தீவிர அரசியல் விமர்சகருமான பிரதாப் பானு மேத்தா தனது பொறுப்பில்லிருந்து திடீர் ராஜினாமா செய்ததுதான் இதற்குக் காரணம். ’‘நான் அந்தப் பல்கலைக்கழகத்தின் அரசியல் இடையூறு என அதன் நிறுவனரே என்னிடம் சொன்னபிறகு எனக்கு இங்கு இனி வேலை இல்லை!” என தனது ராஜினாமாவுக்கான காரணத்தை பிரதாப் பானு மேத்தா கூறியது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பிரதாப் பானு மேத்தாவை இப்படியான நிர்பந்த அடிப்படையில் ராஜினாமா செய்ய வைத்ததற்கான அரசியல் அழுத்தம் என்ன என்பதை அந்த நிர்வாகம் வெளிப்படையாக அறிவித்தாக வேண்டும் என ஆய்வாளர்கள் அந்த பல்கலைக்கழகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பான மனுவில் கனடாவின் தத்துவவியலாளர் சார்லஸ் டெய்லர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அரசியல் தத்துவவியலாளர் ஜான் டுன், பிரிட்டிஷ்-கானா தத்துவவியலாளர் க்வாமே அந்தோணி அப்பையா, கொலம்பியா பல்கலைக்கழகத் தலைவர் லீ சி போலிங்கர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகச் சர்வதேச உறவுகள் பேராசியர் ரோஸ்மேரி ஃபூட் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

பல்கலைக்கழகப் பொருளாதாரத்துறைப் பேராசிரியராக இருந்த அரவிந்த் சுப்ரமணியமும் பிரதாப் பானு மேத்தாவுக்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகராகப் பதவி வகித்தவர்.

அரவிந்த் சுப்ரமணியம் தனது அறிக்கையில், “மேத்தாவை ராஜினாமா செய்யவிடாமல் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டது. இதன்மூலம் தனது கேள்வி கேட்கும் தகுதியையும் பல்கலைக்கழகம் இழந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் சுப்ரமணியம் தனது பொருளாதாரம் சார்ந்த செய்தித்தாள் கட்டுரைகளுக்காக மத்தியில் ஆளும் கட்சியினரால் தீவிரமாக விமர்சிக்கப்பட்டவர்.

இந்த இரண்டு முக்கியப் பேராசிரியர்களின் வெளியேற்றத்தை அடுத்து கடந்த வெள்ளி இரவு தொடங்கி வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர். புறக்கணிப்புக்கான காரணத்தை முன்வைத்துள்ள அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கூட்டமைப்பு 

1. பேராசிரியர் பிரதாப் பானு மேத்தாவை பல்கலைக்கழக நிறுவனர் அரசியல் இடையூறாகப் பார்த்தார் என்பதைப் பொதுவில் நிர்வாகத்தினர் ஒப்புக்கொள்ளவேண்டும். மேலும் எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்று மீண்டும் அவருக்கு பேராசிரியர் பதவியை வழங்கவேண்டும்

2. நிர்வாகிகள் மாணவர்கள் கூட்டமைப்புடன் வெளிப்படையான சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைக்கவேண்டும்.

3. நிர்வாகப் பொறுப்புகள் நியமனம் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய கலந்தாலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்

எனக் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காத நிலையில் செவ்வாய் தொடங்கி பல்கலைக்கழகத் துணை வேந்தரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி போராட்டம் நடக்கும் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக நிர்வாகத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வெளியிடப்படவில்லை.

Published at: 21 Mar 2021 02:51 PM (IST)
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.