தொழில்துறை வளர்ச்சியில் உலகம் அசுர வேகத்தில் முன்னேறி வரும் அதே சூழலில், அதனால் வெளியாகும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மிக மோசமான பாதிப்பை அடைந்துள்ளது. பனிமலைகள் உருகுவது, தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், வன உயிரினங்கள் அழிவு உள்ளிட்டவை மனித இனத்தை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உலக ஓசோன் தினம் ஆகும். 30-வது உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் புதுதில்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. "மாண்ட்ரீல் நெறிமுறைகள்: பருவநிலை நடவடிக்கைகளை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளில் இந்த்தினம் கொண்டாடப்பட்டது. இது ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதிலும், உலக அளவில் பரந்த பருவ நிலை நடவடிக்கை முயற்சிகளை ஒருங்கிணைப்பதிலும் மாண்ட்ரீல் நெறிமுறையின் முக்கிய பங்கை பிரதிபலிக்கிறது. உலக ஓசோன் தினம் பூமியில் வாழ்வதற்கு ஓசோன் படலம் அவசியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
வெப்பநிலை அதிகரிக்கிறது:
எதிர்கால சந்ததியினருக்காக ஓசோனை பாதுகாக்க தொடர்ச்சியான பருவநிலை நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன் இன்றைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய லீனா நந்தன், உயரும் வெப்பநிலை, குளிர்சாதனப் பெட்டிகள், ஏர் கண்டிஷனர்கள் போன்ற குளிரூட்டும் அமைப்புகளின் பயன்பாட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது என்றார். இது வெப்பநிலையை மேலும் அதிகரிக்க செய்கிறது என்று அவர் தெரிவித்தார். மாண்ட்ரீல் நெறிமுறையை திறம்பட செயல்படுத்துவது முக்கியமானது என்றும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது பரந்த முயற்சிகளுடன் இது ஆழமாக இணைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியா முன்னிலை:
மாண்ட்ரீல் நெறிமுறை அமலாக்கத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக இந்த நெறிமுறையின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அடையப்பட்ட இலக்குகள், உலகளாவிய முயற்சிகளுக்கு கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையை நோக்கி நம்மை நகர்த்துவதாக அவர் எடுத்துரைத்தார். பிரதமரின் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் தேசிய முன்முயற்சியின் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் லீனா நந்தன் விளக்கினார்.
ஜூன் 1992 முதல் மாண்ட்ரீல் நெறிமுறையின் ஒரு தரப்பாக உள்ள இந்தியா இந்தியா, மாண்ட்ரீல் நெறிமுறை, அதன் ஓசோனைக் குறைக்கும் படிப்படியான திட்டங்கள், செயல்பாடுகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது..