உணவு தானிய கொள்முதல் மற்றும் விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் உணவு- பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
புது ஒப்பந்தம்: 2024-25 நிதியாண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இன்று கையெழுத்தானது. உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட செயல்திறன் வரையறைகள், பொறுப்புடைமை நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய உணவுக் கழகக் கிடங்குகளின் செயல்திறன் தர நிர்ணயம், கிடங்குகளின் திறன் பயன்பாடு, செயல்பாட்டு இழப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், நவீனமயமாக்கல், கிடங்குகளைத் தானியங்கி மயமாக்கல் போன்ற செயல்திறன் செயல்பாடுகளும் இதில் அடங்கும்.
இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் உணவு மானிய நிதிகள் மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
பொது விநியோக திட்டம்:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், அயோடின் கலந்த உப்பு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருள்களை வாங்கி, பாதுகாத்து, அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. அதே நேரத்தில், ரேசன் அட்டைகளை மக்களுக்கு வழங்கி ரேசன் கடைகள் வழியாக வேளாண் பொருள்கள் செல்வதை மாநில அரசு உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் கோதுமையின் இருப்பைப் பொறுத்து, மாதத்திற்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி இரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ செறிவூட்டப்பட்ட அரிசி உதவிகரமாக இருக்கும், இவற்றினை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது"