அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக உள்ள போர்ட் பிளேர் நகருக்கு ஸ்ரீ விஜய புரம் என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.


பாஜகவின் பெயர் மாற்றும் படலம்:


கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நகரங்கள், நினைவு சின்னங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்பட்டு  வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மாற்றியது.  சமீபத்தில், குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டது. 


முன்னதாக, இது முகலாயர் தோட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, நாட்டின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக உள்ள ஹைதராபாத்துக்கு பாக்கியநகர் என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகருக்கு அகல்யாநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


இந்த நிலையில், மற்றொரு நகரின் பெயரையும் மாற்றி மத்திய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் நகருக்கு ஸ்ரீ விஜய புரம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.


போர்ட் பிளேருக்கு புது பெயர்:


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, காலனித்துவ முத்திரைகளில் இருந்து தேசத்தை விடுவிக்க, இன்று போர்ட் பிளேயரின் பெயரை "ஸ்ரீ விஜய புரம்" என்று மாற்ற முடிவு செய்துள்ளோம்.


முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜய புரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது.


நமது சுதந்திரப் போராட்டத்திலும் சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையான இடம் இல்லை. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய இந்த தீவு இன்று நமது வியூக ரீதியான, வளர்ச்சி அபிலாஷைகளுக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் நமது மூவர்ண கொடியை முதன்முதலில் ஏற்றிய இடமும், தேசத்திற்காக சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடிய செல்லுலார் சிறையும் இங்குதான் உள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் காலனித்துவ கடற்படை அதிகாரியான கேப்டன் ஆர்க்கிபால்ட் பிளேயரின் நினைவாக போர்ட் பிளேர் என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.