உன்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே இருக்கிறது. இதில், இந்தியாவில் இருந்து படிப்புக்காக உக்ரைன் சென்ற மாணவர்கள், தாய் நாடு திரும்புவதற்காக தவித்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதை மேற்பார்வையிட ஸ்லோவாக்கியா சென்றுள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கடைசி மாணவர் உக்ரைனை விட்டு வெளியேறும் வரை இங்கிருந்து  வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார்.


 ஆபரேஷன் கங்காவின் கீழ் உக்ரைன் பகுதிகளில் உள்ள  இந்தியர்களை தாய்நாட்டிற்கு அனுப்பும் செயல்முறையை மேற்பார்வையிட இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நான்கு 'சிறப்பு தூதர்களில்' ரிஜிஜுவும் ஒருவர்.  அவர் புதன்கிழமை ஸ்லோவாக்கியாவின் கோசிஸ் நகரத்தை அடைந்தார்.  உக்ரைன் எல்லையைத் தாண்டி கோசிஸை அடைந்த இந்திய மாணவர்களுடன் உரையாடிய மத்திய அமைச்சர், ”எல்லோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதே எங்களின் நோக்கம். ஒவ்வொரு இந்தியரையும் பாதுகாப்பாக இங்கிருந்து வெளியேற்றுவோம் என்ற உறுதிமொழியை ஏற்கனவே வழங்கியுள்ளோம்.  யாரையும் விட்டு விடக் கூடாது என்பது பிரதமரின் உத்தரவு. போர்க்களத்தில் இருப்பவர்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் உண்டு.  துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு நடந்து கொண்டிருப்பதால், எங்கள் தூதரக ஊழியர்களால் கூட அங்கு செல்ல முடியவில்லை. அதில் பல சிரமங்கள் உள்ளன.


இங்கிருக்கும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. சூழ்நிலைகள் மிகவும் சவாலானவை. ஆனாலும், நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.  மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்ற செய்தியை மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் . என்றார்.


மேலும், அவர் “உக்ரைனில் இருந்து கடைசி இந்தியரை வெளியேற்றும் வரை நான் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டேன்.  பிரதமர் நரேந்திர மோடி ஜி, நமது குடிமக்களைப் பாதுகாப்பாகவும், விரைவில் வீட்டிற்கு அழைத்து வரவும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.  இந்த அளவில் மீட்புப் பணியை மேற்கொள்ளும் ஒரே நாடு இந்தியாதான்” என்று கூறினார்.


 ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரிஜிஜு, “உக்ரைனில் இருந்து ஸ்லோவாக்கியாவை அடைந்த எங்கள் மாணவர்களின் முகத்தில் பெரும் நிம்மதியை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  அவர்கள் அனைவருக்கும் தகுந்த பராமரிப்பு அளிக்கப்பட்டு ஸ்லோவாக்கியாவில் உள்ள கோசிஸ் அருகே தங்க வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 189 பேர் இன்று இரவு இந்தியா புறப்படுகின்றனர்.  நீண்ட துன்பங்களுக்குப் பிறகு எங்கள் மாணவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.






உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக, கங்கா ஆபரேஷன் கீழ் விமானங்கள் அதிகரிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 17,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.


உக்ரைனை விட்டு வெளியேறிய மாணவர்களில், கியேவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முன்பு பதிவு செய்யாத சில இந்தியர்களும் அடங்குவர்.


 இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், பியூஷ் கோயல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.