மாதவிடாய் விடுப்பும், உச்சநீதிமன்ற கருத்தும்:


மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கக்கூடும்.  இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களில் பலர் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒரு வித அச்சநிலையிலேயே வெளியே செல்லும் சூழலும் இருக்கிறது. இன்றைய காலக்கட்டங்களிலும் மாதவிடாய் என்ற சொல்லை பெண்கள் ரகசியமாகவே உச்சரித்து வருகின்றனர். இருப்பினும் மாதவிடாய் பிரச்சினைகளை எதிர்கொண்டு பெண்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்து வருகின்றனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால் பணியிடங்களில் அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும் என்றும், இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரலாம் என்று நீதிபதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து அறிவுறுத்தினர். 


ஒடிசாவில் சுதந்திர தினத்தில் சூப்பர் அறிவிப்பு:


சுதந்திர தினமான இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அம்மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா கலந்து கொண்டு பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.


அதாவது, மாதவிடாய்  நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும், இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார். மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2 வது நாட்களில் இந்த விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். பெண்களின் உடல் ஆரோக்ய நலனில் இத்திட்டம் சிறப்பானதாக இருக்கு என்று நம்பப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் இரு மாநிலங்கள்:


தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஷொமோட்டாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல  கேரளா மற்றும் பீகார்  மாநிலங்களில் ஏற்கனவே இந்த மாதவிடாய் விடுமுறை அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பீகாரிலும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே மாதந்தோறும் 2 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் ஏற்கனவே பெண்களுக்காக பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, ஓய்வூதிய கால பென்சன் தொகை போன்ற பல திட்டங்கள் அமலில் இருக்கும் சூழலில்  மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்கும் திட்டம்   நடைமுறைப்படுத்தப்படுமா என்ற  கேள்வியும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.