மகளிர் இடஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு கட்டாயம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் அமலுக்கு வருமா?
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நல்லது, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதனை நிறைவேற்றாததற்கு வருந்துகிறேன். ஆனால், தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசை திருப்பும் தந்திரமாக பாஜக பயன்படுத்துகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரயறை முடிந்த பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் உடனே நீக்கி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். உண்மை என்னவென்றால், இடஒதுக்கீட்டை இன்றே நடைமுறைப்படுத்த முடியும். இது சிக்கலான விஷயம் இல்லை, ஆனால் அரசு அதை செய்ய விரும்பவில்லை. மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்படுமா என்பது யாருக்கும் தெரியாது.
அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்:
மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். நாட்டின் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மத்திய அரசில் உள்ள 90 துறை செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஒ.பி,.சி. பிரிவை சேர்ந்தவர்கள். மத்திய அரசின் ஒபிசி பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் எத்தனை பேர் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய பாஜக அரசு மறுக்கிறது.
புறக்கணிக்கப்படும் ஒபிசி மக்கள்:
நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவிகித நிதி மீது தான் ஒபிசி அதிகாரிகளால் முடிவு எடுக்கும் சூழல் உள்ளது. நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே ஆதிக்க சாதிகளிடம் தான் உள்ளது. நாட்டின் பெரும்பான்மையாக உள்ள ஒபிசி பிரிவினர் ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் இருக்கின்றனர் என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதி செய்ய முடியும். மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்பதன் பின்னணியில் பெரிய திட்டம் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ராகுல் காந்தி பேசினார்.