தீபாவளி பண்டிகையின்போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பட்டாசு வெடிக்க தடை கோரி மனு:
தீபாவளி பண்டிகையின்போது நாடு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பவர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என அர்ஜுன் கோபோல் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது. அப்போது, பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் எனவும் அவற்றை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பின்னர், தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களை கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்யக் கோரி அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில், பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்க சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
உச்ச நீதிமன்றம் அதிரடி:
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு, இடையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 14ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் உச்ச நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை அடுத்து, இடையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். தீபாவளி பண்டிகையின்போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.